×

செல்போன் உதிரிபாகம் தொழிற்சாலையை தொடர்ந்து சினிமா தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் சோதனை..!

சென்னை: செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடர்ந்து சினிமா தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் வெளிநாடுகளில் இருந்து செல்போன் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போனுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ரெட்மி, ஆப்பிள், பிளாக்பெர்ரி போன்ற ஒன்பது வகையான உயர் ரக செல்போன்களுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த செல்போன் நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படும் அந்தந்த செல்போன் நிறுவனங்களின் அலுவலகங்கள், தொழிற்சாலை வளாகத்திலேயே செயல்படுகிறது. செல்போன் நிறுவனங்களில் வருமானத்திற்கு அதிகமாக பணத்தை ஈட்டி பல கோடி வரி ஏய்ப்பு செய்யபட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் ரெட்மி நிறுவனத்தின் அலுவலகத்தில் நேற்று திடீரென 10க்கும் மேற்பட்ட சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

இதில், தொழிற்சாலை நிறுவனம் பல கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான பல முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.  ஓப்போவில் சோதனை: சென்னை ஓஎம்ஆர் சாலை கொட்டிவாக்கத்தில் உள்ள ஓப்போ மொபைல் நிறுவன தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணி முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இதேப்போன்று சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை பழைய மகாபலிபுரம் சாலை கொட்டிவாக்கம், நேரு நகரில் உள்ள ஓப்போ நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சுமார் 15 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் கைப்பற்றினர்.

அதை தொடர்ந்து அடையார் மத்திய கைலாஷ் 3வது தெருவில் உள்ள நடிகர் விஜய்யின் உறவினரும் ‘மாஸ்டர்’ திரைப்பட தயாரிப்பாளரான சேவிர் பிரிட்டோ வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சேவிர் பிரிட்டோ சினிமா தயாரிப்பாளராகவும், வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் என 15 நிறுவனங்கள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக செல்போன் உதிரிபாகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்கு மதி செய்வதாக கூறப்படுகிறது.
சீன நிறுவனமான ஜியோமி நிறுவனத்தின் செல்போன் உதிரிபாகங்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை கையாளும் நிறுவனத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தான் செய்து வருகிறது.

இதனால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ வீடு மற்றும் அவருக்கு சொந்தமான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் என 15க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் பல கோடி ரூபாய் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் முறைகேடுகள் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கணக்காய்வு செய்த பிறக தான் எத்தனை கோடிகள் மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது என்று தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Xavier Brito , Filmmaker, Xavier Brito, raid
× RELATED செல்போன் உதிரிபாக தொழிற்சாலையில்...