×

சமூக உணவகங்களை அமைப்பதற்கான மூலதன செலவை வழங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு அமைச்சர் சக்ரபாணி கோரிக்கை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நேற்று, ‘மாதிரி சமுதாய சமையல் கூடம்’ திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து மாநில உணவுத்துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பாக  அமைச்சர் சக்ரபாணி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் வருமானம், சமூக பாகுபாடு இல்லாமல் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, கடந்த 40 ஆண்டுகளாக அனைவருக்குமான பொது விநியோக திட்டத்தை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதில், முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. மேலும், சிறப்பு விநியோக திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் உளுந்து, துவரம் பருப்பு தலா ஒரு கிலோவும், ஒரு லிட்டர் சமையல் எண்ணைய்யும் தரப்படுகிறது.

கடந்த 2010ம் ஆண்டு முதல், வாரத்தில் 5 நாட்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது. கோயில்களில் அன்னதான திட்டமும் நடைபெறுகிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு ரூ.16.50 லட்சம் செலவாகிறது. இதனால், 66 ஆயிரம் பேர் பயன் அடைகிறார்கள். மேலும், மாநிலம் முழுவதும் 650 சமூக உணவகங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக நடத்தப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் 407,  மற்ற 14 மாநகராட்சிகளில் 105, நகராட்சிகளில் 138, கிராம பஞ்சாயத்துகளில் 4 சமூக உணவகங்கள் செயல்படுகின்றன.

இந்த திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு, நாடு முழுவதும் சமுதாய உணவு கூடங்கள் அமைக்கலாம். சமுதாய உணவு கூடங்கள் அமைக்க தேவைப்படும் நிலத்தை மாநில அரசு, உள்ளாட்சி அமைப்பின் மூலம் வழங்கலாம். ஆனால் கட்டிடம், சமையல் உள்ளிட்ட மூலதன செலவினை முழுமையாக ஒன்றிய அரசு வழங்க வேண்டும். எங்கள் அனுபவத்தை வைத்து கூற வேண்டுமென்றால், இயற்கை பேரிடர் காலங்களில் இதுபோன்ற உணவகங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி ஒன்றிய அரசுடன் இணைந்து பசிப்பிணி, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Chakrabarty ,Union Government , Provide capital expenditure for setting up community restaurants: Minister Chakrabarty's request to the Union Government
× RELATED யானை பசிக்கு சோளப் பொறி போல்...