×

தமிழகத்தில் முதல்முறையாக கொண்டை ஊசி வளைவுகளில் விபத்துகளை தடுக்க தானியங்கி எச்சரிக்கை ஒலிபெருக்கி!: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

கோவை: தமிழ்நாட்டில் முதல்முறையாக மலைப்பாதை விபத்துகளை தடுக்க தானியங்கி எச்சரிக்கை ஒலிபெருக்கி கருவி பொருத்தப்பட்டு உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கல்லாறு பகுதியில் யானைகள் எளிதாக கடந்து செல்ல மேட்டுப்பாளையம் - ஊட்டி நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர், ஊட்டி மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

இதனை சரிசெய்யும் வகையிலும், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் போக்குவரத்து நிறைந்த உதகை மற்றும் மைசூரு செல்லும் சாலையில் உள்ள 7 கொண்டை ஊசி வளைவின் இரு முனைகளிலும் தானியங்கி அதிநவீன உணர் எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். எதிரெதிரே வாகனங்கள் வரும் போது இந்த அதிநவீன உணர் கருவி ஒலிபெருக்கி மூலம் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும். அதேபோல் கொண்டை ஊசி வளைவுகளில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எச்சரிக்கை வாசகங்கள் ஒளிரூட்டப்படும் என நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,V.V Velu , Tamil Nadu, hill road accident, loudspeaker, E.V.Velu
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...