×

3 கோடி மோசடியில் தலைமறைவாக உள்ள ராஜேந்திரபாலாஜியை பிடிக்க மேலும் 2 தனிப்படை: விருதுநகர் எஸ்பி தகவல்

விருதுநகர்: ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்து தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பிடிக்க மேலும் 2 தனிப்படை அமைத்து, 8 தனிப்படைகள் தேடுவதாக விருதுநகர் எஸ்பி மனோகர் தெரிவித்துள்ளார். ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடியை முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரின் உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகியோர் பெற்றதாக புகார் எழுந்தது. இதன் பேரில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்பட நான்கு பேர் மீது  5 பிரிவுகளில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த மோசடி வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த மனு டிச. 17ல் தள்ளுபடியானது. இதையடுத்து அன்றைய தினம் விருதுநகரில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ராஜேந்திரபாலாஜி காரில் ஏறி தலைமறைவானார். அவரை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் தலைமையில் 6 தனிப்படைகள் தேடி வந்தனர்.

தலைமறைவாக பதுங்கியிருக்கும் ராஜேந்திரபாலாஜியின் உறவினர்கள், அதிமுக பிரமுகர்கள், ஆதரவாளர்கள் உள்பட 600 பேரின் செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். ராஜேந்திரபாலாஜி பெங்களூரு, கேரளா, கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்ற அடிப்படையில் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் எஸ்பி மனோகர் கூறுகையில், ‘‘ஆவின் மோசடி தொடர்பாக, மாவட்ட குற்றப்பிரிவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது இரு வழக்குகள் நவ. 15ல் பதிவு செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை டிச. 17ல் தள்ளுபடி செய்தது. அன்றைய தினம் விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அவசரமாக முடித்துக் கொண்டு காரில் ஏறி சென்றவர், பல கார்களில் மாறி, மாறி சென்று தலைமறைவாகி உள்ளார். தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய 8 தனிப்படைகளை அமைத்து தேடி வருகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார். ராஜேந்திரபாலாஜியை பிடிக்க ஏற்கனவே 6 தனிப்படையினர் தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

கோவையில் பதுங்கலா?
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கேரளா, பெங்களூருவில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி அங்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். இதனிடையே போலீசாரின் கவனத்தை திசைதிருப்பிவிட்டு அவர் கோவையில் பதுங்கியிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

கொங்கு மண்டலத்ைத சேர்ந்த மாஜி அமைச்சர் ஒருவர் அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது கோவை- கேரளா எல்லையில் உள்ள பங்களாவில் ராஜேந்திர பாலாஜி தங்கியிருப்பதாகவும், தனிப்படையினர் கோவைக்கு வந்தால், உடனே கேரளாவுக்கு செல்ல தேவையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், அவர் இருக்கும் இடத்தை நெருங்கியுள்ளதாகவும், விரைவில் கைதாவார் என்றும் தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகம் மற்றும் கேரளா பதிவு எண் கொண்ட கார்களை அவர் மாற்றி பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags : Rajendrapalaji ,Virudhunagar , Rajendrabalaji, Virudhunagar SP, Information
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...