×

திருவேற்காடு, பூந்தமல்லியில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து விழிப்புணர்வு: மெகா கோலம் வரைந்து நூதன பிரசாரம்

பூந்தமல்லி: திருவேற்காடு, பூந்தமல்லியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை குறித்து விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நகராட்சி நிர்வாகம் செங்கல்பட்டு மண்டல இயக்குனர் சசிகலா உத்தரவின்பேரில் திருவேற்காடு நகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மார்கழி மாதம் வண்ண பொடிகளால் வீடுகளில் கோலம் இடுவது வழக்கம் என்பதால் நகராட்சி வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மெகா சைஸ் கோலம் வண்ணப் பொடிகளால் வரையப்பட்டிருந்தது.

பின்னர் நகராட்சி பணியாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் சிவன் கோயில் தெரு, பேருந்து நிலையம், சன்னதி தெரு, தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பள்ளி மாணவர்களிடையே பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடு, மாற்று வழிமுறைகள் குறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் எடுத்துக் கூறினார். நகரின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டன.

இதேபோல் பூந்தமல்லியில் பிளாஸ்டிக் பொருட்களின் தடை குறித்து விழிப்புணர்வு பேரணி நகராட்சி ஆணையர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், தூய்மை பணியாளர்கள், பரப்புரையாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது குறித்தும் முழக்கங்கள் எழுப்பினர். வணிகர்கள் தங்கள் கடைகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்றும், அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடு குறித்தும் வலியுறுத்தப்பட்டது.


Tags : Thiruverkadu ,Poonamallee , Thiruverkadu, plastic products, ban, awareness
× RELATED பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்...