×

இந்திய ரயில்வே ஏற்பாட்டில் கயா, ஷீரடிக்கு சுற்றுலா சிறப்பு ரயில்கள்

நெல்லை: ரயில்வே ஏற்பாட்டில் கயா மற்றும் ஷீரடிக்கு சுற்றுலா சிறப்பு ரயில்கள் மதுரையில் இருந்து இயக்கப்பட உள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் முன்னோர்களுக்கு தை அமாவாசையன்று பித்ரு பூஜை செய்ய ஏதுவாக மதுரையிலிருந்து கயா வரை ஒரு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து அடுத்தாண்டு ஜனவரி 22ம் தேதியன்று புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல் வழியாக கயா சென்று சேரும். வழியில் கொல்கத்தாவில் உள்ளூர் சுற்றுலா, காளி தேவி, காமாக்யா தேவி, காசி விசாலாட்சி, கயாவில் உள்ள மங்கள கௌரி, அலகாபாத்தில் உள்ள அலோபிதேவி, பூரியிலுள்ள பிமலாதேவி போன்ற 5 சக்தி பீடங்களையும், திரிவேணி சங்கமம், கோனார்க் சூரியநாதர் கோவில் மற்றும் அருகிலுள்ள ஆலயங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு கயாவில் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்து கடைசியாக விஷ்ணு பாதத்தை தரிசித்து மதுரை திரும்பும்படி 13 நாட்கள் சுற்றுலாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில் கட்டணம், உணவு, உள்ளூர் போக்குவரத்து, தங்குமிட கட்டணம், பயண காப்பீடு உட்பட நபர் ஒருவருக்கு ரூபாய் 12,885 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுற்றுலாவுக்கான பயணச்சீட்டுகளை www.irctctourism.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இரண்டு கொரோனா தடுப்பு ஊசிகள் செலுத்தியவர்கள் மட்டுமே சுற்றுலாவில் அனுமதிக்கப்படுவர். ஷீரடி சுற்றுலா ரயில் ஷீரடி, பண்டரிபுரம், மந்திராலயம், சனி சிங்னாப்பூர் பாரத தரிசன சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து வருகிற 24ம் தேதியன்று புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக சென்று ஷீரடி சாய்பாபா, பண்டரிபுரம் பாண்டுரங்கன், மந்த்ராலயம் ராகவேந்திரர், சனி சிங்னாபூர் சுயம்பு சனீஸ்வரர் ஆலயங்கள் ஆகியவற்றை தரிசித்து திரும்பும்படி ஏழு நாட்கள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் கட்டணம், உள்ளூர் பேருந்து, உணவு தங்குமிடம் உட்பட நபர் ஒருவருக்கு ரூ. 7,060 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுற்றுலா ரயில்களை தென்மாவட்ட மக்கள் பயன்படுத்தி கொள்ள தெற்கு ரயில்வே கேட்டு கொண்டுள்ளது.

Tags : Kaya ,Sheeradi ,Railways , Tourist special trains for Gaya and Shirdi by Indian Railways
× RELATED தன் பக்தைக்காக சாய் பாபா செய்த அற்புதம்