×

மார்ச் மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் திருவாரூர் திருத்தேர் திருவீதி உலா வர நடவடிக்கை எடுக்கப்படும்; அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருவாரூர்: உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேர் பராமரிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிந்து வருகின்ற மார்ச் மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் திருத்தேர் திருவீதி உலா வர நடவடிக்கை எடுக்கப்படும் என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று திருவாரூர் மாவட்டம், அருள்மிகு தியாகராஜர் சுவாமி திருக்கோயிலில், திருக்கரவாசல் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், நாகை மாவட்டம் திருக்குவளை அருள்மிகு தியாகராய சுவாமி திருக்கோயில், எட்டுக்குடி முருகன் திருக்கோயில், ஆகிய திருக்கோயில்களில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் அமைச்சர் அவர்கள் பேசும்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைப்படி கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்திட தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பல்வேறு திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அந்தவகையில் கடந்த 7 மாதத்தில் 150க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து எந்தெந்த திருக்கோயில்களில் எல்லாம் ஆகமவிதிப்படி கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் முடிந்து கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லையோ, அங்கெல்லாம் திருப்பணிகள் உடனடியாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

சப்தவிடங்களான திருவாரூர், திருக்குவளை, திருவாய்மூர், திருக்கடை வாசல், எட்டுக்குடி முருகன் ஆகிய கோயில்களில் இன்று ஆய்வு மேற்கொண்டேன். திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து இருப்பவர்கள் மீது  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் வாடகைக்கு இருப்பவர்கள் வாடகை மற்றும் நிலுவைத் தொகையை எளிய முறையில் இணையதளம் மூலம் செலுத்த துரித நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.  ஏற்கனவே கடந்த திருவாரூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலில் 10.07.2021 அன்று ஆய்வு மேற்கொண்டோம்.

அப்போது செய்ய உத்தரவிட்ட பணிகள் இதுவரை எவ்வாறு நடைபெற்றுள்ளது என்பதை தற்போது ஆய்வு செய்துள்ளோம். இங்குள்ள நந்தவனங்கள் பசுமையாக்கும் பணி நடைபெற்று வருகிறது, மேலும் திருக்குளத்தை சுற்றியுள்ள மதில் சுவர் கடந்த மழையின்போது இடிந்து விழுந்தது. மதிற்சுவர் சீரமைப்பு பணிகளையும் தற்போது பார்வையிட்டு உள்ளோம். மேலும் இங்கு உள்ள உலக புகழ்பெற்ற ஆழித்தேர் பராமரிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிந்து வருகின்ற மார்ச் மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் திருவாரூர் திருத்தேர் திருவீதி உலா வர நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனையடுத்து திருக்குவளையில் உள்ள தியாகராஜசுவாமி திருக்கோயில் ஆய்வு மேற்கொண்டோம். இங்கு உள்ள திருக்குளம் உரிய முறையில் பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான திருப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இக்கோயிலை சுற்றிலும், இதன் அருகே உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இல்லத்தை சுற்றிலும் உள்ள நடைபாதைகள் மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் திருக்காரவாசல் தியாகராய சுவாமி திருக்கோயிலில் உள்ள இரண்டு தேர்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டு, வருகின்ற தை மாதம் தேரோட்டம் சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருக்கோயில் திருக்குளம் ரூபாய் 90 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருக்கோயில்களில் எங்கெல்லாம் பக்தர்கள் அதிகம் வருகிறார்களோ அங்கெல்லாம் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவுப்படி அனைத்து திருக்கோயில்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.  மேலும், எட்டுக்குடி முருகன் திருக்கோயிலில் திருப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

கலைஞர் பிறந்த இல்லத்துக்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு, அவருடைய குலதெய்வமான அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தேன். இந்த பகுதியில் பக்தர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள்  ஆகியோர் எதிர்பாக்கும்  வகையில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்திரமோகன்,இ.ஆ.ப., ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி காயத்ரி கிருஷ்ணன் இ.ஆ.ப.,, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் திரு. திரு.வி.பி.நாகைமாலி, நாகப்பட்டினம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வி.ஷகிலா, தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் திரு.என்.கௌதமன்,  தருமபுரம் ஆதினம் மாணிக்க வாசகதம்புரான் சுவாமி மற்றும் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர். 


Tags : Tiruvarur Tirthir Mrivethi ,Oil ,Minister ,Sakerbabu , Steps will be taken to visit Thiruvarur Thiruther Tiruvedi on Ayilya Nakshatra in March; Information from Minister Sekarbabu
× RELATED காளான் சமோசா