×

மதுரை மாவட்டத்தில் 1.25 லட்சம் ஏக்கர் நெல்பயிரில் முதல் களையெடுப்பு பணி தீவிரம்

மதுரை : மதுரை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கரில், இரண்டாம் போகத்திற்கான நெல் நடவுப்பணி முடிந்து. பயிரில் முதல் களையெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வேளாண்மை மேலோங்கி இருக்கும் மதுரை மாவட்டத்தில், முல்லைப்பெரியாறு, வைகை, குண்டாறு, சாத்தையாறு போன்ற பாசனத்தை நம்பி பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். இதில் பிரதானமாக அமைந்த பெரியாறு பாசன ஆயக்கட்டுதான்.

ஆண்டுக்கு இருபோகம் நெல் விளையும் 45 ஆயிரம் ஏக்கர், பசுமையானது. இதுதவிர ஒருபோக பாசன ஆயக்கட்டாக மேலூர் வரை 85 ஆயிரம் ஏக்கரும், திருமங்கலம் கால்வாய் பாசனத்தில் 15 ஆயிரம் ஏக்கரும் உண்டு. கடந்த 2013 முதல் 2019 வரை பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால், ஆண்டுக்கு இருபோகம் நெல்சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காமல் பெரும்பாலும், ஒருபோகம் மட்டுமே விளைந்தது.அதிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, சில ஆண்டுகளில் இருபோகமும் பொய்த்து வறட்சி தலை தூக்கியது.

இந்நிலையில், இவ்வாண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் சரியான நேரத்தில் பெய்ததால், பெரியாறு, வைகை அணையில் தண்ணீர் அதன் முழு கொள்ளளவை அடைந்தது. இதனால், முதல் போகத்திற்கு ஜூன் முதல் தேதியும், அதனைத்தொடர்ந்து இரண்டாம் போகத்திற்கு தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. முதல் போகத்திற்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால், 45 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை முடிந்து, தற்போது இரண்டாம் போகத்திற்காக நடவுப்பணி முடிவடையும் நிலையில் உள்ளது.

தற்போது 85 ஆயிரம் ஏக்கர் ஒரு போகத்திலும், திருமங்கலம் கால்வாய், நிலையூர் கால்வாய் ஆகியவற்றின் மூலம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கரில் நெல்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நெல்பயிரில் களையெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. விவசாய கூலித்தொழிலாளர்கள் தீவிரமாக இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்பு தற்போதுதான் சரியான நேரத்தில் இருபோகம் நெல் சாகுபடி நடந்து வருகிறதுஇதுகுறித்து விவசாயி கர்ணன் கூறுகையில், ‘இவ்வாண்டு மதுரை மாவட்டத்தில் சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால், நெல் சாகுபடி முறையாக நடந்து வருகிறது. இது விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விவசாயத்தில் முதல் களையெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது களையெடுப்பு நடைபெறும். இவ்வாண்டு விவசாயத்தில் தண்ணீர் பிரச்னை இல்லை. ஆனால், தேவையான உரம் விவசாயகளுக்கு கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Madurai district , Madurai: Paddy planting for the second phase has been completed on one lakh 25 thousand acres in Madurai district. The first weeding work on the crop is in full swing.
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை