×

குறு, சிறு தொழில் அமைப்புகள் நடத்தும் போராட்டம்: நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் ஒத்திவைப்பு தீர்மானம்

சென்னை : இன்று நாடு முழுவதும் உள்ள 170 க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் அமைப்புகள் எல்லா மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளன. இது குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கான முன் அறிவிப்பை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தந்துள்ளார். இது குறித்து அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

கச்சா பொருள் விலை உயர்வு

குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான கச்சாப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. உருக்கு, தாமிரம், அலுமினியம், நெகிழி விலைகள் கடந்த ஒரு ஆண்டில் 40 லிருந்து 150 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இது குறு, சிறு, நடுத்தர தொழில்களை மிகவும் கடுமையாகப் பாதித்துள்ளன. எனது மதுரை தொகுதியில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.

மடிசியா அமைப்பு இப் போராட்டத்தில் பங்கேற்கிறது. கோயம்புத்தூர் என்ஜினியரிங் தொழில்கள் உள்ளிட்டு தமிழ்நாடு முழுவதிலுமே இப் பாதிப்புகள் பரவியுள்ளன. ஜவுளித் தொழில் நூல் விலையின் கடும் உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளதால் திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்கள் லட்சக்கணக்கான வேலை இழப்புகளை எதிர் நோக்கியுள்ளன.

என்ன செய்ய வேண்டும்?

கச்சாப் பொருட்களின் விலை உயர்வு அரசின் உறுதியான தலையீட்டால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்; விலை நிலைமைகளை கண்காணிக்கவும், இறக்குமதிகள் குறை மதிப்பீடுகளுக்கு ஆளாவதை கண்காணித்து தடுக்கவும்

அமைப்பு ரீதியான ஏற்பாடு வேண்டும் என்று குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் அமைப்புகள் கோருகின்றன.
இது பெருமளவு வேலை இழப்புகளையும், ரூபாய் மதிப்பின் நிலைத் தன்மையையும் பாதிக்கக் கூடிய அபாயத்தையும் உள்ளடக்கிய பிரச்சினை ஆகும். இத்தகைய மிக மிக முக்கியமான பிரச்னை மீது அவசர விவாதம் நடத்தி தீர்வு காண வேண்டியுள்ளது.

இவ்வாறு சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Small ,Organisations ,Parliament Venkadesan , சு.வெங்கடேசன்
× RELATED தொடர்ந்து வெயில் வாட்டிய நிலையில் கல்வராயன்மலையில் திடீர் மூடுபனி