கொடைக்கானலில் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த காட்டெருமைகள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் பள்ளி வளாகத்தில் காட்டெருமைகள் புகுந்ததால், மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் காட்டெருமைகள் அதிகமாக உலா வருகின்றன. இவை நகரில் வலம் வரும்போது, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில், நேற்று பிற்பகல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் 4  காட்டெருமைகள் புகுந்தன. இதனால், மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அங்கிருந்து, நகரில் கலையரங்கம் பகுதியில் உள்ள கடைவீதி வழியாக காட்டெருமைகள் சென்றன. அப்போது அந்த வழியாக வந்த சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களை விரட்டின. இதனால், அவர்கள் அருகில் உள்ள கடைகளில் தஞ்சமடைந்தனர்.

காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நகரின் பல்வேறு பகுதிகளில் திடீர், திடீரென காட்டெருமைகள் உலா வருவதால், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சமடைகின்றனர். வனத்துறையினர் கூடுதல் பணியாளர்களை நியமித்து நகரில் உலா வரும் காட்டெருமைகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: