×

கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு வயது 108 43 ஆண்டு கால வரலாற்றில் மக்களுக்கு 1000 மி.லி., குடிநீர்: வாரியம் தகவல்

சென்னை: கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தனது 108ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், 43 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக சென்னை மக்களுக்கு தினமும் 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியத்தின் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 1914ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 108ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தொழில் நுட்ப ரீதியாகவும், புதுமை புகுத்தல் மற்றும் கொள்திறனை அதிகப்படுத்துதல் ஆகிய வகைகளில் கடந்த ஆண்டுகளில் இந்த இயக்கத்தில் இந்நிலையம் பல மைல்கல் சாதனைகள் எட்டியுள்ளது.

 ஜேம்ஸ் பிரேசரின் என்பவர் சென்னை நகரத்திற்கு குழாய் நீர் வழங்கல் முறையை உருவாக்கிய பிறகு, 1914ம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் சிறப்பு பொறியாளர் ஜே.டபிள்யூ.மேட்லி, சென்னை நகரத்திற்கான சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கல் அமைப்பை  உருவாக்கினார். 1990ம் ஆண்டு ஏப்ரல் 14ம்தேதி அப்போதைய முதல்வர் கலைஞரால் நாளொன்றுக்கு 90 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கி வைக்கப்பட்டது. 1990ம் ஆண்டிற்கு முன்பு நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது நாளொன்றுக்கு 270 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
 
 கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையம் மூலம் 25 லட்சம் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை குடிநீர் வாரியம் ஆரம்பிக்கப்பட்டு 43 ஆண்டுகளில் முதல் முறையாக தற்போதுதான் தினந்தோறும் 1000 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kilpauk , Downhill, drinking water treatment plant, drinking water,
× RELATED ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது...