×

இந்தியாவுக்கு தேவைப்பட்டால் கூடுதல் ரபேல் போர் விமானம்: பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் தகவல்

புதுடெல்லி: ‘இந்தியாவுக்கு கூடுதலாக ரபேல் போர் விமானங்கள் தேவைப்பட்டால், அவற்றை வழங்க பிரான்ஸ் தயாராக இருக்கிறது,’ என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ₹59,000 கோடிக்கு வாங்க, ஒன்றிய அரசு கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. தற்போது வரை 33 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில், இந்தியாவுக்கு வந்துள்ள பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். அதற்கு முன்பாக, கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்று பேசுகையில், ``ரபேல் விமானங்கள் குறித்து இந்திய விமானப்படை திருப்தி தெரிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒப்பந்தத்தில் உள்ளபடி, கொரோனா தொற்றையும் பொருட்படுத்தாமல் 36 ரபேல் போர் விமானங்களும் உரிய நேரத்தில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். நட்பு நாடுகள் ஒரே மாதிரியான போர் விமானங்களைப் பயன்படுத்துவது, அந்நாட்டு ராணுவத்தின் உண்மையான சொத்து மற்றும் படைக்கு கூடுதல் வலு சேர்க்கும். இரு நாடுகளின் நட்புறவு, ஒத்துழைப்பில் புதிய முன்னேற்றம் ஏற்படும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்தியாவுக்கு தேவைப்பட்டால், கூடுதல் ரபேல் போர் விமானங்களை வழங்க பிரான்ஸ் தயாராக உள்ளது,’’ என்றார்.

மேலும் 36 ரபேல் கொள்முதல்
சீனாவுடன் மோதல் வலுத்து வரும் நிலையில், முப்படைகளையும் ஒன்றிய அரசு தீவிரமாக பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில், பிரானசிடம் இருந்து மேலும் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், அது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்றும் தெரிகிறது.

Tags : India ,French Defense Minister , India, Rafael Flight, France Minister of Defense, Information
× RELATED இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல்...