×

வேலூர் கோட்டை அகழியில் இருந்து உபரிநீர் வெளியேறும் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்-மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

வேலூர் : வேலூர் கோட்டை அகழியில் இருந்து உபரிநீர் வெளியேறும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினர். வேலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் வேலூரிலும் தொடர் மழையால் ேகாட்ைட அகழியில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால், கோட்டை அகழியில் இருந்து ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது.

இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் ெசய்ய முடியாமல் தவித்தனர். இதையடுத்து, கோட்டை அகழியில் இருந்து மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். நவீன மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்ற முயற்சித்தனர். கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏ கார்த்திகேயன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினர். 5 நாட்கள் போராடி, அகழி நீர் வெளியேறும் மதகு கால்வாயை கண்டறிந்தனர். ஆனால் மதகை திறக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். இதற்கிடையே அகழிநீர் வெளியேறும் புதிய மீன்மார்க்கெட் அருகே உபரிநீர் வௌியேறும் கால்வாய் பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளும், அகழிநீர் வெளியேற்ற தடையாக இருந்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

தினகரன் செய்தி எதிரொலியாக, கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவின்பேரில், ஆர்டிஓ விஷ்ணுபிரியா, தாசில்தார் செந்தில் ஆகியோர் கால்வாய் உள்ள இடத்தினை கணக்கெடுத்து அளந்து குறியீடுகளை பதிவு செய்தனர். இதில் கால்வாய் ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமையில், கட்டிட ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் கொண்ட குழுவினர், புதிய மீன்மார்க்கெட் அருகே அகழிநீர் வெளியேறும் கால்வாய் ஒட்டி அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இதில் கால்வாய் ஆக்கிரமித்திருந்த 5 வீடுகளின் ஒரு பகுதிகள் இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து கால்வாய் முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றி தடுப்புசுவர்கள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கால்வாய் வழித்தடங்களை பராமரிக்க கோரிக்கை

மாநகராட்சி பகுதிகளில் உள்ள கால்வாய் வழித்தடங்களை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு ெசய்து, பராமரிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் செய்யும்போதே வேடிக்கை பார்க்காமல் உடனே அகற்றுவதோடு, ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளவற்றையும் பாரபட்சமின்றி உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Vellore Fort moat-Corporation , Vellore: Corporation officials yesterday removed the encroachments of the canal overflowing from the Vellore Fort moat. Vellore
× RELATED கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும்...