×

தொடங்கியது மார்கழி மாதம் வைபவம் கோயிலில் திருப்பாவை பாடும் சிறுவர்கள்

காஞ்சிபுரம்: மார்கழி மாதம் இறைவனை வழிபாடு செய்ய உகந்த மாதமாக இந்துக்களால் கருதப்படுகிறது. இதில் சிவன் கோயில்களில் திருவெம்பாவை, பெருமாள் கோயில்களில்  திருப்பாவை  பாடப்படும். இந்நிலையில் கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள விஷ்ணு காஞ்சி பகுதி மலையாள தெருவில் உள்ள அரி பஜனை கோயிலுக்கு அதிகாலையிலேயே நீராடி நெற்றியில் திலகமிட்டு வந்த சிறுவர்கள், முதியவர்களின் வழிகாட்டுதல் ஏதுமின்றி கோயிலில் உள்ள ஆர்மோனியம், மிருதங்கம், ஜால்ரா, உள்ளிட்ட வாத்தியங்களை எடுத்து சுவாமி முன்பு அமர்ந்து பஜனைப் பாடல்களை மனமுருக பாடுகின்றனர். மார்கழி மாதத்தில் பஜனை பாடல்களை பாட முதியவர்களே மறந்து வரும் நிலையில், மார்கழி மாதம் பிறந்த முதல் நாளே ஆர்வத்துடன் வந்து பஜனை பாடல்களைப்  பாடத் துவங்கிய சிறுவர்களின் செயலை  அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.

மாமல்லபுரம்: மாமல்லபுரம் மேற்கு ராஜவீதியில் 550 ஆண்டுகள் பழமையான கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குடிகொண்டுள்ள கிருஷ்ண பரமாத்மா, பல்லவர் காலத்தில் இங்குள்ள மலைக்குன்றில் வெண்ணையை உருட்டி, திரட்டி வைத்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி, பிற்காலத்தில் வெண்ணை உருண்டை கல் என அழைக்கப்பட்டது. அது தற்போது, புராதன சின்னமாக சுற்றுலா பயணிகளால் பார்க்கப்படுகிறது. பழமையான இந்த நவநீதகிருஷ்ணன் கோயிலில் இன்றுவரை பல தலைமுறைகளாக மார்கழி பஜனை நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 6 மணிக்கு புறப்பட்ட பஜனை குழுவினர், முக்கிய வீதிகள் வழியாக சென்று ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் மண்டபம், அர்ச்சுணன் தபசு, வெண்ணை உருண்டை கல், கணேச ரதம் ஆகிய இடங்களில் நின்று ஆண்டாள் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களை பாடி, கிருஷ்ணரை போற்றி மனமுறுகி வணங்கினர். அப்போது, சுமங்கலி பெண்கள் பஜனை குழுவினர் கொண்டு வந்த அணையா விளக்கில் சில்லறை காசுகளை காணிக்கையாக போட்டு வழிபட்டனர். பஜனை குழுவினர் கோயிலுக்கு வந்தவுடன் நவநீதகிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மார்கழி மாத பஜனை ஊர்வலத்தில் வைணவ பத்தர்கள், பெரியவர்கள், சிறுவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேப்போல், மாமல்லபுரம் ஸ்ரீ தலசயன பெருமாள் கோயிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் தாயாருக்கு அலங்காரம் செய்து, பெருமாள் இடுப்பில் மார்கழி பெயர் பொறித்த பட்டயம் அணியப்பட்டது.

Tags : Tirupavai ,Vaibhavam temple , It started in the month of March
× RELATED ஆறுமுகநேரியில் பஜனை வீதியுலா நிறைவு