சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ரூ10 ஆயிரம் அனுப்பியவரை வழக்கில் இருந்து விடுவிக்க மறுப்பு: ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட் உத்தரவு

சென்னை: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் பணியாற்றியவந்தார். இவர் ஒழுங்காக பணிக்கு வராததால் பணி நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து இவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தன்னை வேலையில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக்கூறி இவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த 2018ம் ஆண்டு தபால் மூலம் ஒரு மனு அனுப்பி உள்ளார்.

அந்த மனுவுடன் 10 ஆயிரம் ரூபாயையும் அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், போக்குவரத்துக்கழக பணியாளர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அவரது தரப்பில் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை  விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், மனுதாரர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் அவருக்கு மனநல பாதிப்பில்லை எனவும்,  மனுதாரருக்கு தன் மீதான குற்றச்சாட்டு குறித்தும், நீதிமன்ற விசாரணை குறித்தும் அறிந்து கொள்ள முடிகிறது எனவும் அறிக்கை தந்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: