×

ஜெனிவா, சுவிட்சர்லாந்து உள்பட 77 நாடுகளுக்கு பரவியது ஒமிக்ரான் தொற்று!: உலக சுகாதார அமைப்பு தகவல்..!!

ஜெனிவா: உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் ஜெனிவா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 77 நாடுகளுக்கு பரவியுள்ளதாகவும், உரிய சோதனை நடத்தப்பட்டால் மேலும் பல நாடுகளில் கண்டறியப்படலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனும் புதிய வகை கொரோனா தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளது. ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன. இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு  கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் 77 நாடுகளுக்கு பரவியதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம், முந்தைய உருமாறிய கொரோனா வகைகளான டெல்டா, டெல்டா பிளஸை விட ஒமிக்ரான் வேகமாக பரவி வருவதாக தெரிவித்தார்.

ஜெனிவா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் ஒமிக்ரான் தொற்று பரவிவிட்டதாகவும், 77 நாடுகளில் தற்போது ஒமிக்ரான் பரவல் இருப்பதாகவும் தெரிவித்தார். உரிய சோதனை நடத்தப்பட்டால் மேலும் பல நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்படலாம் என்றும் தெரிவித்தார். ஒமிக்ரான் பரவலை தடுக்க பூஸ்டர் தடுப்பூசி போடுவதை உலக சுகாதார அமைப்பு எதிர்க்கவில்லை என்றும் அதேநேரம் இதை காரணமாக கொண்டு தடுப்பூசி பதுக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் குறிப்பிட்டார்.


Tags : Geneva ,Switzerland ,World Health Organization , Geneva, Switzerland, Omigron, World Health Organization
× RELATED உலக சுகாதார நிறுவனம், யூனிசெப்...