×

3 மாத குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை சேரலாம்: எல்ஐசி.யின் புதிய பாலிசி `தன் ரேகா’

சென்னை: எல்ஐசி.யின் புதிய பாலிசி `தன் ரேகா’ டிசம்பர் 13ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.  இதனை வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் பிராந்திய மேலாளர் எஸ்.கீதா அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் சென்னை 2வது மண்டலத்தின் மூத்த மண்டல மேலாளர் டி.பாஸ்கரன், ஏராளமான எல்ஐசி பாலிசிதாரர்கள் பங்கேற்றனர். மார்க்கெட்டிங் மேலாளர் எஸ். காளிமுத்து வரவேற்புரை அளித்தார். அப்போது பேசிய பிராந்திய மேலாளர் எஸ்.கீதா, ``தன் ரேகா பாலிசி தற்போதைய கால கட்டத்திற்கு அத்தியாவசிமானது.

வட்டி விகிதம் குறைந்து வரும் இந்த சூழலில், பாதுகாப்பான அதே நேரம் கவர்ச்சிகரமான முதலீட்டிற்கான வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், மக்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை பற்றிய அக்கறையுடன் இது கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள், பாலிசிதாரர்களின் நலனை கருத்தில் கொண்டுள்ள எல்ஐசி.யின் அர்ப்பணிப்புக்கு தன் ரேகா பாலிசி ஒரு அடையாளமாகும்,’’ என்றார். இந்த பாலிசியில் பிரீமியம் செலுத்துதல் பாலிசி காலத்தின் பாதியாக குறைக்கப்பட்டு, வாழும் காலத்திற்கான பலன்கள் முன்பே வழங்கப்பட்டாலும், முழுத்தொகையும் வழங்கும் முதல் மணிபேக் பாலிசியாகும்.

பாலிசியின் 6வது ஆண்டிலிருந்து ஆயிரம் உத்தரவாதத் தொகைக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை உத்தரவாதமான கூடுதல் தொகை வழங்கப்படும். தன் ரேகா 20, 30 மற்றும் 40 ஆண்டு கால சிங்கிள் பிரீமியம் மூலம் செலுத்த முடியும். அத்துடன் பிரீமியம் செலுத்தும் கால கட்டத்தை பாதியாக அதாவது 10, 15 மற்றும் 20 ஆண்டுகளாக குறைத்து கொள்ளலாம். பிறந்து 90 நாட்கள் முதல் அதிகபட்சமாக 60 வயது உடையவர்கள் வரை இந்த பாலிசியில் சேரலாம். பெண்களுக்கு சிறப்பு பிரீமிய கட்டணங்கள் என்பது இதன் கூடுதல் அம்சமாகும்.

இதன் மூலம் கடன் பெறும் வசதியும் உள்ளது. இறக்க நேரிடும் பட்சத்தில் 125% அடிப்படை உத்தரவாதத் தொகை வழங்கப்படும். சென்னை 2வது மண்டலத்தின் மூத்த மண்டல மேலாளர் பாஸ்கரன் நன்றி உரை நிகழ்த்தினார்.

Tags : LIC , Up to 3 months old baby up to 60 years old: LIC's new policy 'Than Rekha'
× RELATED அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த ...