×

பரங்கிப்பேட்டை அருகே தைல மரத்தோப்பில் திருநங்கை அடித்து கொலை; போலீஸ் தீவிர விசாரணை

புவனகிரி: பரங்கிப்பேட்டை அருகே தைல மரத்தோப்பில் திருநங்கை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூர் பகுதியை சேர்ந்தவர் பனிமலர் (31). திருநங்கையான இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி. கடந்த பல ஆண்டுகளாக மணலூரில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு திருநங்கை பனிமலர் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பு.முட்லூர் தைல மரத்தோப்பு ஒன்றில் சடலமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, திருநங்கை பனிமலர் முகத்தில் காயங்களுடன், காதில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.

இதையடுத்து அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இறந்த திருநங்கையுடன் ஒன்றாக தங்கி இருந்த ரூபா (34) என்ற திருநங்கை பரங்கிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட திருநங்கை பனிமலர் அந்த இடத்திற்கு சென்றது ஏன்? அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே திருநங்கை பனிமலர் இறந்தது  பற்றி அறிந்த சக திருநங்கைகள் சுமார் 25க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் அரசு  மருத்துவமனை முன்பு குவிந்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருநங்கை கொலையானது குறித்து புகார் அளித்த ரூபா கூறுகையில், சம்பவம் நடந்த நேற்றிரவு கொலை செய்யப்பட்ட திருநங்கை பனிமலர் தனக்கு செல்போனில் பேசியதாகவும், தன்னை சிலர் தாக்கி விட்டார்கள். அதனால் பேச முடியவில்லை. உடனே வா எனக் கூறியதாகவும், பின்னர் சம்பவ இடத்திற்கு சென்றபோது திருநங்கை பனிமலர் இறந்து கிடந்ததாக தெரிவித்தார். மேலும், திருநங்கைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. கடலூர் மாவட்டத்தில் முதன்முறையாக இதுபோன்ற சம்பவத்தில் ஒரு திருநங்கை கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநங்கைகளின் பாதுகாப்பை தமிழக முதல்வர் உறுதி செய்ய வேண்டும் என திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Parangipettai , Transgender man beaten to death in a teak grove near Parangipettai; Police are conducting a serious investigation
× RELATED கொத்தட்டை கோயில் புனரமைப்பு பணி...