×

ஆலங்காயம் அருகே அடிப்படை வசதிகளுக்காக ஏங்கி தவிக்கும் மலை கிராம மக்கள்

*அரசு அலுவலகங்களுக்கு 120 கி.மீ. பயணம்

*கலெக்டர் நடவடிக்கைக்கு கோரிக்கை

ஆலங்காயம் : ஆலங்காயம் அடுத்த வசந்தபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் மலை கிராம மக்கள், தங்களது கிராமத்தை ஊராட்சியாக அறிவிக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். ேமலும் ஊராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு 120 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலங்காயம் காவலூர் அடுத்த வசந்தபுரம் மலை கிராமத்தில், 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மலை கிராமமானது, திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயதில் இருந்து, திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் பகுதிக்குச் செல்லும் வழியில், காவலூர் வைனு பாப்பு தொலைநோக்கி நிலையத்திலிருந்து வலது பக்கமாக சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தில் மலைவாழ் மக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இந்த வசந்தபுரம் கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுக்களும், கிராம வனக்குழுவும் செயல்படுகிறது. இந்த குழுக்களின் பிரதிநிதிகள் தங்களது கணக்கு வழக்குகளை, அலுவலகங்களுக்கு எடுத்துச் சென்று வரவும், வங்கிகளுக்கு சென்று வரவும், சுமார் 120 கிலோ மீட்டர் தூரம் சென்று வர வேண்டியுள்ளது.
இதனால் மலைகிராம மக்கள், அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது, புங்கம்பட்டுநாடு ஊராட்சியில் உள்ள வசந்தபுரம் மலை கிராம மக்கள், மேலும், ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று வர 50 கிலோ மீட்டர் தூரமும், திருப்பத்தூரில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு சென்று வர 120 கிலோமீட்டர், காவல் நிலையத்திற்கு சென்று வர 120 கிலோமீட்டர் என்று வெகுதூரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த மலை கிராம மக்களுக்கு தொலைத் தொடர்பு வசதி என்பது இதுவரை எட்டாக்கனியாகவே உள்ளது. இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் அலைபேசிகளை, சுமார் 1 கிலோ மீட்டரில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்து உயரமான இடத்திற்கு வந்தால் மட்டுமே சிக்னல் கிடைக்கிறது. இந்த மலை கிராமத்தில் வசிக்கின்ற மக்களுக்கு அவர்களது உறவினர்களோ, நண்பர்களோ எந்த ஒரு தகவலையும், தெரிவிப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  வெளியூரில் வசிக்கின்றன உறவினர்களும், நண்பர்களும் இப்பகுதிக்கு நேரில் வந்து சுக, துக்க நிகழ்ச்சிகளை கூறினால் மட்டுமே, இந்த மலை கிராம மக்களுக்கு தெரிய வருகிறது. இந்த வளரும் நவீன விஞ்ஞான யுகத்தில், 4ஜி, 5ஜி என்ற அபார வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கும் நிலையில், இப்பகுதி வாசிகள் இன்னமும் சுக, துக்க நிகழ்ச்சிகளை ஆட்களைக் கொண்டு தெரிவிக்கும் நிலையே இருந்து வருகின்றனர்.

மலை கிராம மக்களை தொடர்பு கொள்ள இந்த பகுதியில் ஒரு செல்போன் கோபுரம் அமைத்தால், இப்பகுதி மக்களுக்கு வசதியாக இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது போன்ற பல்வேறு காரணங்களினால், அருகே உள்ள ஆலங்காயம் ஒன்றியம், நாயக்கனூர் ஊராட்சியில் வசந்தபுரம் கிராமத்தை இணைக்க வேண்டும் என்று 3 முறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கியும், ஆட்சியர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

புங்கம்பட்டுநாடு ஊராட்சியின், கடைசி கிராமமாக, இந்த கிராமம் இருப்பதனால், ஊராட்சி நிர்வாகத்தினர் கிராமத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி மற்றும் சாலை வசதியையே இதுவரை செய்து தரவில்லை என்றும், இது குறித்த புகார்களையும் நேரில் வந்து பார்ப்பது இல்லை என்றும் இப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், வசந்தபுரம் பகுதிக்கு இதுவரை பேருந்து வசதி செய்து தரப்படாததால், அன்றாட தேவைக்கு நகரப் பகுதிகளுக்கு சென்று வர முடியாத நிலைக்கு மலை கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து, பலமுறை அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என்று பல்வேறு தரப்பினருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது, இப்பகுதியில் இயங்கிவரும் அங்கன்வாடி கட்டிடம் மற்றும் நியாய விலை கடை வாடகை வீடுகளில் இயங்கி வருகிறது.
இப்பகுதியில் உள்ள தபால் நிலையம் பழைய தொலைக்காட்சி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இவைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, சிறப்பு திட்டத்தின் கீழ் வசந்தபுரம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவித்து வாணியம்பாடி தாலுகா ஆலங்காயம் ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயங்காத கால்நடை மருத்துவமனை

இந்த மலை கிராம பகுதியில் வசிக்கின்ற  மக்கள் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பெரும்பாலும் ஆடு, மாடு உள்ளிட்ட  கால்நடைகளை வளர்ப்பவர்களாக உள்ளனர். இவர்கள், தங்கள் கால்நடைகள்  நோய்வாய்ப்பட்டால் சிகிச்சை பெறவும், கால்நடைகளுக்கு கருவூட்டல் போன்ற  கால்நடை மருத்துவ தேவைகளுக்கும், கொரோனா ஊரடங்குக்கு முன்பு வரை 15  கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்திரம் பகுதியில் செயல்பட்டு வந்த கால்நடை  மருத்துவமனைக்கு லோடு ஆட்டோவிலும், சரக்கு வாகனங்களிலும் கால்நடைகளை  ஏற்றிச் சென்று வந்தனர்.

தற்போது, அந்த கால்நடை மருத்துவமனையும்  இயங்காத காரணத்தினால், இப்பகுதி வாசிகள் ஆலங்காயம், புங்கம்பட்டுநாடு,  புதூர்நாடு மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கால்நடை  மருத்துவ மனைகளுக்கு சுமார் 60 முதல் 120 கிலோ மீட்டர் தூரம் வரை,  கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி கொண்டு சாலை வசதி இல்லாத குண்டும் குழியுமான  பாதையில் பயணிக்க வேண்டிய, அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே கால்நடை மருத்துவமனை இயங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Alangayam , Alangayam: In Alangayam next to Vasanthapuram village the hill villagers who are suffering without basic facilities, their village
× RELATED ஆலங்காயம் அருகே விபத்தில் தந்தை...