×

ஊசூர் அருகே வீராரெட்டிபாளையத்தில் கைவரிசை மெக்கானிக் வீட்டின் பூட்டு உடைத்து ₹2.50 லட்சம் திருட்டு-மிளகாய்பொடி தூவிச் சென்ற மர்ம ஆசாமிகள்

அணைக்கட்டு :  அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த வீராரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டன் (42). டிராக்டர் மெக்கானிக். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். வீராரெட்டிபாளையத்தில் இவர்கள் வசித்து வந்த வீடு சேதமடைந்த நிலையில் இருந்ததால் இவர்கள் குடும்பத்துடன் அருகே உள்ள தெள்ளூர்பாளையம் கிராமத்தில் உள்ள வீட்டில் 2 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இதில் கோதண்டன் மட்டும் வீராரெட்டிபாளையத்தில் உள்ள பழைய வீட்டில் டிராக்டர் பழுதுபார்க்கும் பொருட்கள், டிராக்டர் உதிரி பாகங்களை அதில் வைப்பது, மேலும் டிராக்டர் பழுதுபார்த்ததில் வரும் பணம் மற்றும் உதிரி பாகங்கள் வாங்க விற்றதில் வந்த பணம் உள்ளிட்டவைகளை இந்த வீட்டில் வைத்து வந்துள்ளனர்.

 இதனால் காலை முதல் இரவு வரை இவர் மட்டும் இந்த வீட்டில் இருந்து விட்டு சென்றுவிடுவாராம். இதே போல் நேற்று முன்தினம் உதிரிபாகங்கள் வாங்கல், விற்றல் தொடர்பான பணத்தை அந்த வீட்டில் உள்ள இரண்டு அறைகளில் இருந்த பீரோக்களில் வைத்துவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டு மேல் மாடியில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வீட்டிற்கு வரும் கதவு உடைந்திருப்பதாக அருகில் இருந்தவர்கள் கோதண்டன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில், கோதண்டன் வீட்டிற்கு வந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்கம் வழியாக மிளகாய் பொடிகள் தூவப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்தபோது அறைகளின் கதவை உடைத்து உள்ளே பீரோவில்  இருந்த ₹2.50 லட்சம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.தகவலறிந்த இன்ஸ்பெக்டர் நிலவழகன், அரியூர் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் அங்கு வந்து திருட்டு நடந்த வீடு மற்றும் பீரோக்களை ஆய்வு செய்தனர். மேலும் கோதண்டன் மற்றும் அருகில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய ஆய்வில், திருட்டு நடந்த வீட்டின் பின்புறத்தில் மாடிமேல் இருந்த கதவை மர்ம ஆசாமிகள் உடைத்து படிகட்டு வழியாக வந்து இரண்டு அறைகளின் கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது, மேலும் பாழடைந்த இந்த வீட்டில் பிரோவில் இருந்த பணத்தை திருடி கொண்டு, பிடிபடாமல் இருக்க பீரோ அருகிலும், வீடு முழுவதும் ஆங்காங்கே மிளகாய் பொடியை தூவிவிட்டு சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கோதண்டன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள், மேப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Veerarettipalayam ,Uzur , Dam: Gothandan (42) hails from Veerarettipalayam village next to Dam taluka Uzur. Tractor Mechanic. Native
× RELATED ஊசூரில் புதிதாக 2 ஆழ்துளை கிணறுகள்...