×

கடலூரில் சிறு தொழில் செய்யும் மீனவர்களை அச்சுறுத்தி வரும் இழுவலைகளை தடை செய்யக்கோரி மீனவர்கள் போராட்டம்

கடலூர்: கடலூரில் சிறு தொழில் செய்யும் மீனவர்களை அச்சுறுத்தி வரும் இழுவலைகளை தடை செய்யக்கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் சுமார் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 2,000 ஃபைபர் படகுகள், 500 விசை படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 25,000 மீனவர்கள் நேரடியாகவும், 20,000 மீனவர்கள் மறைமுகமாகவும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் எஸ்.பி.பி, ஐ.பி ஆகிய விசைப்படகுகள் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாகவும், கூடுதல் குதிரைத்திறன் கொண்ட எஞ்சின்களை பயன்படுத்துவதாகவும் மேலும் வலைகளுக்கான வலை கண்ணினை நிர்ணயித்ததை விட சிறியதாக வைத்து பயன்படுத்தி வருகிறார்கள் என சிறுதொழில் செய்து வரும் மீனவர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். மேலும் அவர்கள் இழு வலைகளை பயன்படுத்தும் படகுகளின் செயல்பாடுகளை தடுக்க கோருகின்றனர். இழுவலைகளை பயன்படுத்தி அனைத்து மீன்களையும் இவர்களே பிடித்து விடுவதால் சிறுதொழில் செய்து வரும் மீனவர்களுக்கு மீன்கள் ஏதும் கிடைப்பதில்லை.

மேலும் அவர்கள் வலைகளை சேதப்படுத்துவதாகவும் இந்த மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த இழு வலைகளையும், படகுகளையும் தடை செய்ய கோரி தேவனாம் பட்டினம், தாழங்குடா, ராசாப்பேட்டை என்ற 11 கிராம சிறுதொழில் செய்யும் மீனவர்கள் தற்போது மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கடல் வழியாக 100க்கும் மேற்பட்ட படகுகளில் வந்து கருப்பு கொடி கட்டி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் தற்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் பாதுகாப்பிற்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களின் போராட்டம் காரணமாக இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் முக்கிய கோரிக்கையாக இழுவலைகளை பயன்படுத்தி சிறிய கண்ணினை வைத்து மீன்பிடிக்கும் படகுகளை தடை செய்ய வேண்டும், சிறு மீனவர்களை காப்பாற்ற வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. தடை செய்தல் மட்டுமே எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும். அதனால் இந்த போராட்டத்தை நாங்கள் கைவிட மாட்டோம் என்று மீனவர்கள் கூறி வருகின்றனர். இதனால் பரபரப்பான சூழல் தற்போது நிலவி வருகிறது.

Tags : Cadalore , Fishermen, struggle
× RELATED கடலூர் அருகே மேற்கூரை இடிந்து விழுந்த...