×

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: பெண்களுக்கு எதிரான குற்றங்களும் உயர்வு: யுனிசெப் ஆய்வில் பரபரப்பு தகவல்

சேலம்: கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாக யுனிசெப் ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து சமூக மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 150 கோடி குழந்தைகளின் (97 சதவீதம்) கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெண் குழந்தைகள் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது. பள்ளிகள் மூடப்பட்டதால், பள்ளி சார்ந்த சத்துணவு திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 2000ம் ஆண்டில் இருந்து, பல்வேறு முயற்சிகளால் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை 9.40 கோடியாக சரிந்துள்ளது. ஆனால், கொரோனா பாதிப்பால், 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா யுத்தத்தின் அடுத்த பெரும் சீரழிவாக குழந்தைகள் திருமணம் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, உலக அளவில், ஆண்டு தோறும் 1.20 கோடி பெண் குழந்தைகளுக்கு 18 வயதுக்குள் திருமணம் நடைபெறுகிறது. கொரோனா தொற்றால், அடுத்த 10 ஆண்டுகளில் 1.30 கோடி குழந்தை திருமணங்கள் நடைபெறும் என ஐ.நா எச்சரித்துள்ளது. கொரோனா தொற்றால் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் ஊரடங்கு கால கட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்தன. அதிலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் 181 என்ற எண்ணுக்கு குழந்தை திருமணங்கள் குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் குழந்தைகள் திருமணம் தொடர்பான புகார்கள் வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புகார் வந்த அனைத்து திருமணங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. திருமணங்களை நிறுத்திய பிறகு,பெற்றோர்களிடம் ஆவணத்தில் எழுதி வாங்கிக் கொண்டுதான் பிள்ளைகளை அனுப்புகின்றனர். ஆனால், அதனையும் தாண்டி வேறு ஊருக்கு சென்று திருமணம் செய்து வைக்கும் சம்பவங்களும்  நடைபெறுகின்றன. திருமணம் செய்து விட்டு மீண்டும் ஊருக்கு வரும்போது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறன. கல்வித்துறை தான் இதற்கான ஆலோசனைகளை குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்க முடியும். இந்த ஆலோசனை வழங்குவதெல்லாம் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்….

The post தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: பெண்களுக்கு எதிரான குற்றங்களும் உயர்வு: யுனிசெப் ஆய்வில் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Salem ,Corona Coronation ,
× RELATED அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை...