×

‘பேருந்தில் யாரையும் பாகுபாடு பார்ப்பதில்லை’ இருளர் தம்பதிக்கு பாலாபிஷேகம் அசர வைத்த டிரைவர், கண்டக்டர்: வீடியோ வைரலால் பரபரப்பு

சென்னை. சென்னை பாரிமுனையில் இருளர் இன தம்பதிக்கு பாலாபிஷேகம் செய்து டிரைவர், கண்டக்டர் பேருந்தில் ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருமஞ்சேரிக்கு செல்லும் பேருந்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தை உட்பட நரிக்குறவர்கள் மூன்று பேர் ஏறினர். இவர்களை பேருந்திலிருந்து கண்டக்டர் இறக்கிவிட்ட வீடியோ  சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் பேருந்து கண்டக்டர், டிரைவர் மற்றும் ஒருவர் என மூன்று பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், நரிக்குறவர்கள் இருவரும் சண்டை போட்டதால் பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட தகவல் தெரிய வந்தது. அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கைவிடப்பட்டது. ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ பெண்மணியை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. தொடர்ந்து பேருந்தின் கண்டக்டர் மற்றும் டிரைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில் நேற்று இருளர் இனத்தை சேர்ந்த கணவன் மனைவிக்கு பால் அபிஷேகம் செய்து பேருந்தில் ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பெரம்பூரில் இருந்து பாரிமுனை நோக்கி சென்ற தடம் எண் 42 என்ற பேருந்து நேற்று சென்ட்ரல் மூர்மார்க்கெட் பகுதியில் நின்றது. அப்போது இருளர் இனத்தை சேர்ந்த கணவன் -மனைவி  2 பேர் பேருந்தில் ஏறினர். டிரைவர் அப்துல் மன்னன் (60) மற்றும் கண்டக்டர் மோகன் (35) ஆகிய இருவரும் இருளர் தம்பதியை பேருந்தின் உள்ளே வரச் சொல்லி அமர இருக்கை கொடுத்தனர். அவர்கள் பாரிமுனை செல்ல வேண்டும் என்று கூறினர். பாரிமுனையில் இறக்கி விட்டதும், அவர்கள் எங்கே செல்ல வேண்டும் என்று விசாரித்தனர். அப்போது பெரம்பூர் வீனஸ் செல்ல வேண்டும் என்று கூறி உள்ளனர்.

அங்கு நின்ற பேருந்து தடம் எண் 242 நிற்கும் இடத்துக்கு இருவரும் அழைத்து சென்றனர். அப்போது டிரைவர் அப்துல் மன்னன், கண்டக்டர் மோகன் ஆகியோருடன் 242 பேருந்தின் டிரைவர் சதீஷ் பாபு, கண்டக்டர் பூமணி ஆகிய 4 பேரும் சேர்ந்து இருளர் தம்பதியின் காலில் பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மஞ்சள் குங்குமம் வைத்து பேருந்தில் ஏற்றினர். இதுகுறித்து டிரைவர் அப்துல் மன்னன் கூறுகையில், சமீபகாலமாக பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் குறித்து ஒரு தவறான கண்ணோட்டம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. எனக்கு 60 வயது ஆகிறது. இன்னும் 5 மாதத்தில் ஓய்வு பெற உள்ளேன்.

எனது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு நிலைமையை கண்டதில்லை. தற்போது செய்தித்தாள்களில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் குறிப்பிட்ட சிலரை பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டனர் என்ற செய்தி மனவேதனையை அளிக்கிறது. ஒருபோதும் நாங்கள் யாரையும் தவறாக நினைப்பது கிடையாது. பேருந்தில் ஏறும் அனைவரும் எங்களுக்கு ஒரே ஜாதி ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே. நாங்கள் பாகுபாடு பார்ப்பது கிடையாது. எங்களது வழித்தடத்தில் எத்தனையோ நரிக்குறவர்கள் ஏறி உள்ளனர். அவர்களுக்கு இடம் அளித்து அவர்களுடைய மொழி புரியவில்லை என்றாலும் அவர்களை உரிய இடத்தில் கொண்டு சென்று சேர்த்து வருகிறோம்.

யாரோ ஒருவர் செய்யும் தவறினால் ஒட்டுமொத்த ஓட்டுனர்களையும் நடத்துனர்களையும் பொதுமக்கள் தவறாக நினைக்க வேண்டாம் என்ற நோக்கத்தில்தான் இன்று இருளர் இன மக்களின் கால்களில் பால் ஊற்றி அவர்களை கவுரவித்தோம். மற்றபடி வேறு எந்த ஒரு உள்நோக்கமும் எங்களுக்கு இல்லை. இதுகுறித்து அவர்கள் இந்தி மொழியில் பகுத் அச்சா என கூறி எங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் சேவகனாக பயணிப்போம். யாரோ ஒருவர் செய்யும் தவறினால் ஒட்டுமொத்த சமூகத்தையும் தவறாக நினைக்க வேண்டாம் என கேட்டுக்கண்டார். இருளர் இன மக்களின் காலில் பாலாபிஷேகம் செய்து கவுரவித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Balabhishekam , 'I don't discriminate against anyone on the bus' Balabhishekam Asara driver, conductor: Video goes viral
× RELATED வீட்டின் முன் இறந்த பாம்புக்கு இறுதி...