×

வழக்கில் கைப்பற்றப்பட்டவை தக்கலை காவல் நிலையத்தில் நாட்டு வெடிகள் வெடித்து சிதறின: ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின

தக்கலை : தக்கலை காவல் நிலையத்தில் இருப்பில் இருந்த நாட்டு வெடிகள் திடீரென வெடித்து சிதறின. குமரி மாவட்டத்தில் வழக்குகளில் கைப்பற்றப்படும் நாட்டு பட்டாசுகளை நீதிமன்றத்தில் ஆவணமாக ஒப்படைக்கும் வகையில், பாதுகாப்பாக சாக்கு பைகளில் சுற்றி காவல் நிலையத்தில் தனி அறைகளில் வைத்து இருப்பது வழக்கம். இதே போல் குமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரு வருடங்களுக்கு முன் கைப்பற்றப்பட்ட நாட்டு பட்டாசுகளை பாதுகாப்பாக சாக்கு பையில் வைத்து, காவல் நிலையத்தின் மேல் மாடியில் வைத்து இருந்தனர். காவல் நிலையத்தையொட்டி மன்னர் கால கட்டிடங்கள் உள்பட ஏராளமான பழைய கட்டிடங்களும் உள்ளன.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் திடீரென காவல் நிலையத்தின் மேல் மாடியில் இருந்த பட்டாசுகள் வெடிக்க தொடங்கின. முதலில் லேசான புகை வந்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் இவை  அடுத்தடுத்து  வெடித்து கட்டிடங்கள் அதிர்ந்தன. காங்கிரீட் கட்டிடம் என்பதால்  இடியாமல் ஆங்காங்கே கீறல்கள் விழுந்தன. இந்த வெடி சத்தத்தை கேட்டதும் அனைவரும் அவசர, அவசரமாக வெளியே ஓடினர். காவல் நிலையத்தையொட்டி நீதிமன்றம், பொதுப்பணித்துறை அலுவலகம், தபால் நிலையம், ஏராளமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. வெடி சத்தத்தை கேட்டவர்கள் காவல் நிலையத்தை நோக்கி ஓடி வந்தனர்.

சுமார் 15 நிமிடங்கள் வரை அடுத்தடுத்து வெடிகள் வெடித்தன. தீயணைப்பு படையினர் வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் காவல் நிலையத்தின் முன்புற பகுதிகளில் இருந்த கண்ணாடிகள், பக்கவாட்டில்  உள்ள ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. முன் பகுதியில் போடப்பட்டு இருந்த ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை அதிர்வுகளால் உடைந்தது. நல்ல வேளையாக கட்டிடங்கள் இடிந்து விழ வில்லை. ஆங்காங்கே கீறல்கள் மட்டுமே இருந்தன. சிசிடிவி கேமராக்களும் சேதம் அடைந்தன. வெடி விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 


Tags : Thakkala , Country bombs explode at Thakkala police station: Window panes shattered
× RELATED தக்கலை அருகே கூலித்தொழிலாளிக்கு கத்திக்குத்து