×

உடுமலை பகுதியில் மழைப்பொழிவால் பூத்துக் குலுங்கும் கரும்புப்பயிர்கள் -விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம்

உடுமலை :  உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் அதிகளவில் பணப் பயிரான கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறையான சூழலில் ஆண்டுக்கொரு முறை அறுவடை செய்யப்படும் கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு ஏற்றதாக உள்ளது.அறுவடைப் பணிகளுக்கு வெளியூர்களிலிருந்து குடும்பம் குடும்பமாக தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு அறுவடைப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

மேலும் மடத்துக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் அமராவதி சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்த முறையில் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு வழங்கி வருகின்றனர். இதன் மூலம் விற்பனை வாய்ப்பு எளிதாகக் கிடைப்பதாலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்று சாகுபடிப் பணிகளை மேற்கொண்டால் சர்க்கரை ஆலையில் பணம் பெற்று கடன் அடைப்பது விவசாயிகளுக்கு எளிதாக உள்ளது. இதனால் விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் நடப்பு ஆண்டில் இந்த பகுதிகளில் மழைப் பொழிவு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் கரும்பு இனப்பெருக்கம் செய்வதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் கரும்புப் பயிர்கள் பூக்கத் தொடங்கி உள்ளன.இவ்வாறு கரும்புப் பயிர்கள் பூக்கும்போது உட்புறம் சக்கை போல் மாறி சாறு வற்றி விடுகிறது. பொதுவாக ஏக்கருக்கு 40 டன் முதல் 70 டன் வரை அறுவடை செய்யும் சூழலில் தற்போது பூக்கள் பூத்துள்ளதால் பாதியளவுக்குக் கூட மகசூல் கிடைக்காத நிலையே ஏற்படும். எனவே வேளாண்மைத்துறையினர் ஆய்வு செய்து கரும்பு பூத்ததால் நஷ்டமடைந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Udumalai , Udumalai: Sugarcane is the major cash crop cultivated in Udumalai and Madathukulam areas. Currently prevailing
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு