சபரிமலை சீசன் எதிரொலி: கன்னியாகுமரியில் அலைமோதும் பக்தர்கள்

கன்னியாகுமரி: சபரிமலை சீசன் எதிரொலியாக சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் அலைமோதுகின்றனர். இவர்களுடன் சுற்றுலா பயணிகளும் இணைந்து சூரிய உயத்தை கண்டுகளித்து பகவதியம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதே போல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதியம்மனை தரிசிக்கவும் பக்தர்கள் வருவதை பார்க்க முடிகிறது.

சபரிமலை சீசன் காலங்களில் ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தால் கன்னியாகுமரி களைகட்டுவது வாடிக்கை. இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐயப்ப பக்தர்கள் திரிவேணி சங்கமம் கடற்கரைக்கு அனுமதிக்கப்படவில்லை. தற்போது இந்த ஆண்டுக்கான சபரி மலை சீசன் தொடங்கி உள்ளது. சீசன் தொடங்கிய நாள் முதல் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக இல்லை. ஏதோ பெயர் அளவுக்கு வந்து சென்றனர். இதனால் கன்னியாகுமரி சீசன் காலத்திலும் டல் அடித்தது.

ஆகவே இந்த முறை ஐயப்ப பக்தர்களின் வருகை சொற்ப அளவிலேயே இருக்கும் என்று வியாபாரிகளும் நினைத்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாளாக அதிக அளவில் ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வரத் தொடங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக கடற்கரை பகுதி முழுவதும் ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தை காணமுடிகிறது. கன்னியாகுமரிக்கு வரும் ஐயப்ப பக்தர்கள், உள்நாடு, வெளிநாடு சுற்றுலா பயணிகள் ஆகியோர் காலையில் சூரிய உதயத்தை கண்டு ரசிக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகில் சென்று கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை குடும்பமாக பார்த்து வருகின்றனர். இது தவிர முக்கடல் சங்கமத்தில் நீராடிவிட்டு பகவதியம்மனை தரிசிக்கின்றனர். இதையடுத்து காந்தி மண்டபம், காமராஜர் நினைவு மண்டபம் உள்பட பல்வேறு இடங்களையும் பார்த்து விட்டு திரும்புகின்றனர். இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Related Stories: