‘முன்னிலைப்படுத்தினால்தான் வெற்றி கிடைக்குமாம்’ தேமுதிக செயல் தலைவராகிறார் பிரேமலதா விஜயகாந்த்: கட்சியினர் விரும்புவதால் விரைவில் அறிவிப்பு

சென்னை: நடிகர் விஜயகாந்த் 2005ம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார். 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் தேமுதிக அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டாலும், விருத்தாசலத்தில் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது, தேமுதிக 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவர் பதவியை பிடித்தது. பின்னர், அதிமுகவுடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் தேமுதிக தலைமையில் மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டு, உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த், அதிமுகவிடம் தோல்வியைச் சந்தித்தார். அடுத்தடுத்த தேர்தல்களில் தேமுதிக தோல்வியை தழுவியதால், 2009ல் 10.3 சதவீதமாக இருந்த தேமுதிகவின் வாக்கு விகிதம் தற்போது ஒரு சதவீதத்துக்கு கீழ் சென்றுவிட்டது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தல் அமமுகவுடன் கூட்டணி அமைத்து, 60 இடங்களில் போட்டியிட்டு, ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதன்பின், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் பெரிய வெற்றி பெறவில்லை. இதனால் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களில் பலர் திமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இணைந்தனர். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி  அந்தஸ்தை பிடித்த தேமுதிக கடந்த 10 ஆண்டுகளில் தவறான அரசியல் முடிவுகளால்  தொடர்ந்து வீழ்ச்சியை கண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக தனித்துப் போட்டியிட உள்ளது. ஆனால் கட்சியினர் ஆர்வம் காட்டவில்லை. சமீபத்தில், சென்னையில் நடந்த ேதமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், வரும் தேர்தல்களில் தேமுதிகவை எழுச்சி பெற வைக்க அதிரடி முடிவுகளை எடுக்க வேணடும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. விஜயகாந்த் தலைவராக தொடரும் நிலையில் உடல்நிலை காரணமாக அவரால் முன்பு போல் செயல்பட முடியவில்லை. எனவே பொருளாளர் பிரேமலதாவுக்கு செயல் தலைவர் பதவி வழங்க வேண்டும் அல்லது பொதுச் செயலாளர் பதவி உருவாக்கி அவரை நியமித்து முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர். இதற்கு பிரேமலதா, விஜயகாந்துடன் ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என கூறியுள்ளார்.

ஏற்கனவே, விஜயகாந்த் உடல்நலம் சரியில்லாததால் பிரேமலதா தான் கடந்த தேர்தல்களில் பிரசாரம் செய்தார். கூட்டணி பேச்சுவார்த்தை என அனைத்தும் அவரது தலைமையில் தான் நடந்தது. தற்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என கட்சியின் அனைத்து கூட்டங்களும் அவரது தலைமையில் தான் நடக்கிறது. எனவே, கட்சி தொடர்பான அனைத்து முடிவுகளை எடுக்கும் வகையில், பிரேமலதாவை கட்சியின் செயல் தலைவராக நியமிக்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்த தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: