×

பண மோசடி வழக்கில் சிவசங்கரன் மனு தள்ளுபடி: தூதரக விலக்கு தர உச்ச நீதிமன்றம் மறுப்பு

சென்னை: ஐடிபிஐ. வங்கியில் ரூ.600 கோடி பண மோசடி செய்த விவகாரத்தில் தூதரக விலக்கு கேட்ட சிவசங்கரனின் கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்த உச்ச நீதிமன்றம், அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன், ஐடிபிஐ வங்கியில் கடன் பெற்று ரூ.600 கோடி மோசடி செய்தது தொடர்பாக சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, ஒன்றிய உள்துறை அமைச்சகம் அவரை தேடப்படும் நபராக (லுக் அவுட் நோட்டீஸ்) அறிவித்து நோட்டீஸ் வெளியிட்டது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சிவசங்கரன் வழக்கு தொடுத்தார். அதில், தான் செசல்ஸ் நாட்டின் தூதரக அலுவலர் என்பதால், தனது உரிமைகளை தடுக்க முடியாது என குறிப்பிட்டார். அந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் அமர்வு, ‘செசல்ஸ் நாட்டின் தூதரக அலுவலர் என சிவசங்கரன் கூறியதை ஏற்க மறுத்து விட்டனர். மேலும், சிவசங்கரனுக்கு எதிரான வழக்குகளை பட்டியலிட்டதுடன், ஒரு நாட்டில் வணிக, தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவரை, தூதரக அலுவலராக கருத முடியாது எனத் தெரிவித்தனர். மேலும், கடந்தாண்டு அக்டோபரில் இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிவசங்கரன் தாக்கல் செய்த ரிட் மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சி.டி.ரவிக்குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிவசங்கரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங், ‘‘சிவசங்கரன் செசல்ஸ் குடியரசின் தூதுவராக பணியாற்றியவர். அதனால், வியன்னா ஒப்பந்தத்தின்படி அவருக்கு இந்தியாவில் குற்றவியல் வழக்குகளில் இருந்து விடுபட வாய்ப்பு உள்ளது,’ என தெரிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரித்த ஒன்றிய அரசின் சொலிசிட்டர் துஷார் மேத்தா, “ராஜதந்திர அடிப்படையில் சிவசங்கரன் தூதரக விலக்கு கேட்பதை ஒன்றிய அரசு ஏற்க தயாராக இல்லை. வங்கியில் மோசடி செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதால்தான் வெளிநாடு தப்பித்து செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது,’ என தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனுதான் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், நேரடியாக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை நீதிமன்றம் ஏற்க மறுக்கிறது. இந்த விவகாரத்தில் தூதரக விலக்கு வேண்டும் என்ற சிவசங்கரனின் அனைத்து கோரிக்கைகளையும் உச்ச நீதிமன்றம் நிராகரிக்கிறது.’ என தெரிவித்தனர். மேலும், அவருடைய மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

Tags : Sivasankaran ,Supreme Court , Sivasankaran's petition dismissed in money laundering case: Supreme Court denies diplomatic exemption
× RELATED பட்டாம்பி அருகே பர்னீச்சர் தொழிற்சாலையில் தீ விபத்து