×

கனமழையால் பாதிக்கப்பட்ட இரும்புலியூர், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் வெள்ளத்தடுப்பு, நிவாரண பணி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: தண்ணீர் வெளியேற நிரந்தர கால்வாய் அமைக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட இரும்புலியூர், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு மற்றும் நிவாரண பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மழைநீர் வெளியேற நிரந்தர கால்வாய் அமைக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்த போதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, போர்க்கால அடிப்படையில் பணியாற்றுவதால் வெள்ள பாதிப்புகள் விரைவாக சீர்செய்யப்பட்டு வருகிறது.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் கனமழை தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 29ம் தேதி கனமழையால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இரும்புலியூர் மற்றும் முடிச்சூர் பகுதிகளையும், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த வரதராஜபுரம் பகுதிகளையும் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் நகராட்சி, இரும்புலியூர், வன்னியன்குளம் பகுதிக்கு சென்றார். அங்கு வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் நிவாரண பணிகளின் விவரங்கள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், முடிச்சூர் ஊராட்சி அமுதம் நகரில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார்.

அப்போது, அமுதம் நகரில் மழைகாலங்களில் வெள்ளநீர் வடிவதற்காக வெளிவட்ட சாலையில் உள்ள அடையாறு ஆற்றுப் பாலத்தை அகலப்படுத்தவும், அமுதம் நகரில் தேங்கும் மழைநீரை அடையாறு ஆற்றுப் பாலத்தில் சேர்க்கும் வகையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கால்வாயை நிரந்தரமாக அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, முடிச்சூர் ஏரியில் இருந்து வரும் கூடுதல் நீரை சிக்கனா ஏரி வழியாக அடையாறு ஆற்றில் இணைக்கும் வகையில் திறந்தவெளி கால்வாய் அமைத்திடவும் முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  

பின்னர், காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சி பிடிசி குடியிருப்பு பகுதிகள், மகாலட்சுமி நகர் மேம்பால பகுதியில் நீர்வள ஆதாரத்துறையால் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு பணிகள் ஆகியவற்றை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இறுதியாக, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்ணூறான்குளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது சுத்திகரிப்பு நிலையம், 90 சதவிகித திறனுடன் செயல்பட்டு வருவதால், தாம்பரம் மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளையும் இந்த சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைத்து முழு திறனுடன் செயல்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, செல்வப்பெருந்தகை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் அமுதா, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் ராகுல் நாத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் ஆர்த்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,Irumbuliyur ,Mudichur ,Varatharajapuram , Chief Minister MK Stalin inspects flood prevention and relief work in Irumbuliyur, Mudichur and Varatharajapuram areas affected by heavy rains: Order to construct permanent canals to drain water.
× RELATED மணிப்பூர்; முன்னாள் முதலமைச்சர்...