×

பாதி மன்னிப்பு அளிக்கிறேன்!: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் சிறை தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்தார் ராணுவ தளபதி..!!

யங்கூன்: மியான்மரில் மனித உரிமை போராளியாக அறியப்படும் ஆங் சான் சூகிக்கு நேற்று ராணுவ நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனை 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. அவரை விடுதலை செய்யக்கோரி மியான்மர் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான 76 வயதான ஆங் சான் சூகியை கடந்த 10 மாதங்களாக அந்த நாட்டு ராணுவம் வீட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளது.

இவர் மீது வாக்கி டாக்கி இறக்குமதி ஊழல் வழக்கு, ராணுவத்திற்கு எதிராக பேசியதாக தேச துரோக வழக்கு, கொரோனா விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக வழக்கு என்று பல வழக்குகள் சுமத்தப்பட்டன. நேற்று இவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து மியான்மர் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 50 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த மியான்மரில் 2015ம் ஆண்டு ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி ஆட்சியை பிடித்தது.

பின்னர் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலிலும் ஆங் சான் சூகியின் கட்சி அமோக வெற்றிபெற்றது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி இந்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி ஆங் சான் சூகி மற்றும் அதிபர் உள்ளிட்டோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஜனநாயகத்திற்காக 20 ஆண்டுகள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் ஆங் சான் சூகி. இவருக்கு நேற்று 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், உலக நாடுகளின் கண்டனத்தை தொடர்ந்து பாதி மன்னிப்பு அளிப்பதாக கூறியிருக்கும் ராணுவ தளபதி, தண்டனை காலத்தை 2 ஆண்டுகள் குறைப்பதாக அறிவித்திருக்கிறார்.


Tags : Aung San Suki , Aung San Suu Kyi, sentenced to 2 years in prison, Army Commander
× RELATED சென்னை விமான நிலைய கழிவறையில்...