×

'சென்னை ஐஐடி-யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை உறுதிப்படுத்துக'!: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை..!!

டெல்லி: சென்னை ஐஐடி-யில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை ஒன்றிய கல்வி அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை ஐஐடி-யில் கடந்த மாதம் 20ம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது. மேலும் சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பூஜ்ய நேரத்தின் போது பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை ஐஐடி-யில் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

மேலும் இது மாநில அரசின் மரபை மீறும் செயல் என்றும் அவர் சாடினார். 1970ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் அறிமுகம் செய்யப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, அனைத்து அரசு விழாக்களிலும் பாடப்படுவது வழக்கமாகும். இதனை ஐஐடி தொடர்ந்து மீறி வருவதாக  தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம்சாட்டினார். இனி வரும் காலங்களில் ஐஐடி-யில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை ன்றிய கல்வி அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது; 2018ம் ஆண்டிலும் ஐஐடி-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் பாடல் பாடப்பட்டது. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. அனைத்து மொழிகளையும் விரும்புகிறோம். ஆனால் தமிழை தொழுகிறோம். அதனால் சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை குறிப்பிட்ட அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


Tags : IIT Chennai ,Tamilachchi ,Thangapandian ,Union Government ,Parliament , Chennai IIT, Tamiltai Greetings, Parliament, Tamilachchi Thangapandian
× RELATED பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அதற்கான...