தமிழ்மொழிக்கு இன்னுயிர் நீத்தவர்களுக்கு கலைஞரைபோல முதல்வரும் நினைவுமண்டபம் அமைக்கிறார்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேச்சு

சென்னை: தமிழ்மொழிக்கு இன்னுயிர் நீத்தவர்களை போற்றும் வகையில் கலைஞரை போலவே முதல்வர் மு.க.ஸ்டாலினும் நினைவு மண்டபங்களை அமைக்கிறார் என்று அமைச்சர் மு.ெப.சாமிநாதன் கூறினார். பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமைகளை புகழ்பாடும் ஓராண்டு தொடர் நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கும் விழா திருவல்லிக்கேனி பாரதியார் நினைவு இல்லத்தில் நேற்று நடந்தது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழாவை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:  மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் பெரும்புலவன் பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

பாரதியார் குறைந்த வயதில் துர்பாக்கிய வசமாக காலமானார். அவர் இன்னும் சில காலம் உயிரோடு இருந்திருந்தால் மக்களுக்கு வழிகாட்டியாக இருந்திருப்பார். அவர் வாழ்ந்த இந்த காலத்தில் இந்த மண்ணுக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில் அவருடைய கவிதைகள் விளங்குகிறது.  அந்தளவிற்கு அவர் தன்னுடைய வாழ்க்கையை பதிவுசெய்துவிட்டு மறைந்துள்ளார். விடுதலைப் போரட்டத்திற்காக அவர் கொடுத்த குரல் இன்றைக்கு விடியலை ஏற்படுத்தியுள்ளது. ஓங்கி ஒலிக்கிறது. மேலும் வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எத்தலப்ப நாயக்கர், இந்த தாய் மண்ணைக் காப்பாற்றுவதற்கு எத்தனை தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை நினைவுகூரும் வகையில் அவர்களுக்கு நினைவரங்கம், உருவச் சிலை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு தங்களது இன்னுயிரை நீத்தவர்களை போற்றக் கூடிய கலைஞரை போலவே தமிழக முதல்வரும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், தமிழ்மொழி காத்த தியாகிகளுக்கும், உருவச் சிலையும் மற்றும் நினைவு மண்டபமும் அமைக்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) அம்பலவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: