×

செண்பகராமன்புதூரில் கோயில் சிலை உடைப்பு

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் பகுதியில் கோயிலின் சிலையை மர்ம நபர்கள் உடைத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செண்பகராமன்புதூர் மாதவலாயம் சாலையில் செண்பகராமன்புதூர் அருகே பூதப்பாண்டியன் குளம் உள்ளது. இந்த குளத்தின் வடக்கு கரையோரம் ஸ்ரீ மந்திரமூர்த்தி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் சாஸ்தா, சப்தகன்னி, செண்பகவள்ளி அம்மன், மந்திரமூர்த்தி, பூதத்தார், பரிவார தெய்வங்கள் உள்ளன.

மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் சாஸ்தா சுவாமி மட்டும் கல்பிடத்தாலும் மற்ற தெய்வங்கள் மண் மற்றும் செங்கலாலும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் தினமும் மாலை 6 மணிக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். செண்பகராமன்புதூரை சேர்ந்த சுகுமார், கலாமூர்த்தி, முகேஷ், ஆகியோர் பூஜை செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு முகேஷ் பூஜை செய்து விட்டு சென்றுள்ளார். மறுநாள் வழக்கம்போல் மாலை 6 மணிக்கு கோயிலுக்கு பூஜை செய்ய வரும்போது கோயிலின் முன் கதவு திறக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது கோயிலின் மூலஸ்தான தெய்வமான மந்திரமூர்த்தி சுவாமியின்  பீடத்தில் மார்பளவு முற்றிலும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
 மேலும் சுவாமியின் முன்பு இருந்த 2 பித்தளை சூலாயுதமும் திருடப்பட்டிருந்தது. இதுபற்றி ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து கோயில் குடும்பத்தார் வந்தனர். மூலஸ்தான தெய்வமான மந்திரமூர்த்தி சுவாமியின் பீடம் முற்றிலும் மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சுவாமியின் பின்புறம் சிவப்பு கலரில் ஒரு சட்டை கிடந்தது.

அது அதே பகுதியை சேர்ந்த ஒருவருடையது என தெரியவந்தது இது குறித்து காவல் நிலையத்திலும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுசுவர் அமைக்கப்பட்டு தினமும் பூஜை நடைபெற்று வருகின்ற இக்கோயிலில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நுழைந்து மூலஸ்தான சுவாமியான மந்திரமூர்த்தி பீடத்தை முற்றிலும் சேதப்படுத்தியது இப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Shenbagaramanputhur , Temple idol demolition at Shenbagaramanputhur
× RELATED செண்பகராமன்புதூர் கொள்முதல்...