×

மழையால் வரத்து குறைவு, வாகன போக்குவரத்து பாதிப்பு தக்காளி மீண்டும் ரூ.100க்கு விற்பனை: இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் வெள்ளநீர் புகுந்ததால் விளைச்சல் கடுமையாக பாதிப்பை சந்தித்துள்ளது. நெல், வாழை மற்றும் காய்கறி பயிர்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. இதனால், காய்கறி விலையும் தினசரி என்ற வகையில் உயர்ந்து வருகிறது.

குறிப்பாக தக்காளி விலை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டது. அதாவது, சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் அதிகப்பட்சமாக தக்காளி விலை ரூ.120 வரை விற்கப்பட்டது. இதுவே சில்லறை விலையில் தரத்திற்கு ஏற்றார் போலும், ஏரியாக்களுக்கு ஏற்றார் போலும் தக்காளி விலை கிலோ ரூ.140, ரூ.150, ரூ.160 என்று விற்பனையானது. இந்த விலை உயர்வு நடுத்தர, எழை, எளிய மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது.  விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தக்காளியை குறைந்த விலையில் அரசு பசுமை பண்ணை கடைகளில் விற்பனை செய்தது.

தக்காளி விலை உயர்வு மக்களை வாட்டி வதைத்தது. எந்த சமையலாக இருந்தாலும் அதில் தக்காளி முக்கிய பங்கு வகித்து வருவதால், இந்த விலை ஏற்றம் இல்லத்தரசிகளை கடும் கவலையடைய செய்து வந்ததது. இந்த நிலையில் மழை குறைந்ததால் கடந்த ஓரிரு நாட்களாக வரத்து அதிகரித்தது. இதனால் மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்து கிலோ ரூ.50 வரை விற்பனையானது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பலத்த மழை பெய்துள்ளதால் தக்காளி விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் ஓசூர், பொள்ளாட்சி, திண்டுக்கல் போன்ற பகுதிகளிலும் இருந்து விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மழையால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. 60 லாரிகளில் வந்த தக்காளி, தற்போது 40க்கும் குறைவான லாரிகளில் தான் வருகிறது. இது போன்ற காரணங்களால் தற்போது தக்காளி விலை கிலோ ரூ.60லிருந்து ரூ.75 என்று இன்று(நேற்று) அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தான் இந்த விலை. இதனை வாங்கி சில்லறையில் விற்பவர்கள் கிலோவுக்கு ரூ.25 வரை அதிகமாக விற்கின்றனர். அதாவது, சில்லறை விலையில் தக்காளி கிலோ நேற்று ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. குறைந்து வந்த நிலையில், தக்காளி விலை மீண்டும் அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளை மீண்டும் கவலையடைய செய்துள்ளது. எந்த வகையான சமையலாக இருந்தாலும் அதில் தக்காளி முக்கிய பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Tomatoes sell for Rs 100 again: Housewives shocked
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...