×

உதவி வேளாண் அலுவலர் பதவிக்கு வரும் 15, 16ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமாமகேஸ்வரி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் உமா மகேஸ்வரி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு வேளாண் விரிவாக்க சார்நிலைப்பணிகளில் அடங்கிய உதவி வேளாண் அலுவலர் பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்துத்தேர்வை கடந்த ஏப்ரல் 17ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய வேளைகளில் நடத்தியது. எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் விவரங்கள் செப்டம்பர் 23ம் தேதி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இத்தேர்வு தொடர்பான மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரரின் மதிப்பெண்/ ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக்கடிதத்தினை விண்ணப்பதாரர் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு அதற்கான விவரம் எஸ்.எம்.எஸ். மற்றும் இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்.

மூலசான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்,  ஒட்டுமொத்த தரவரிசை,  இடஒதுக்கீட்டு விதி, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவரும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. விண்ணப்பதாரர் மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



Tags : DNBSC ,Umamageswari , Assistant Agricultural Officer, Certification Verification, Consultation, DNBSC Secretary Umamageswari
× RELATED ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப்...