×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் ஏராளமானோர் விண்ணப்பம் பெற்றனர்: 29ம் தேதி கடைசி நாள்

சென்னை: தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் இன்று முதல் விண்ணப்பம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து காலை முதலே ஏாளமானோர் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். வருகிற 29ம் தேதி கடைசி நாளாகும். தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி மற்றும் 9ம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நகரப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக சார்பில், மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புகிறவர்கள் 26ம் தேதி (இன்று) முதல் வருகிற 29ம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட அதிமுக அலுவலகங்களில் உரிய கட்டண தொகை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று அறிவித்து இருந்தனர்.

அதன்படி, மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறவர்கள் ரூ.5 ஆயிரம், நகராட்சி வார்டு உறுப்பினருக்கு ரூ.2,500, பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கு ரூ.1,500 விண்ணப்ப கட்டணமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதிமுக கட்சி தலைமை அறிவித்தபடி, இன்று காலை 10 மணி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கட்சியின் தலைமை அலுவலகங்களில் அதிமுகவினர் ஏராளமானோர், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பணத்தை கட்டி விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். வருகிற 29ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகிற 29ம் தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பது, மறைமுக தேர்தல் மூலமாகவே (தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள் வாக்களித்து) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags : Presidents , A large number of AIADMK candidates have applied to contest in the local body elections: 29th is the last day
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்