வீடு கட்ட சிறுக, சிறுக சேமித்த ரூ.5 லட்சத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்த பனியன் தொழிலாளி தற்கொலை!: இரு பெண் குழந்தைகள் உடன் தவிக்கும் மனைவி..!!

திருப்பூர்: திருப்பூரில் வீடு கட்ட சேமித்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மியில் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். திருப்பூர் பழையகாடு ராஜமாதா நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மீனா. இந்த தம்பதிக்கு 6 மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதி இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். வீடு கட்டுவதற்காக இருவரும் சேர்த்து சிறுக. சிறுக 5 லட்சம் ரூபாயை சேமித்து வைத்திருந்தனர். இந்த பணத்தை வைத்து சுரேஷ் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். மனைவி அடிக்கடி கண்டித்து வந்த நிலையில், சுரேஷ் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தொடர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீடு கட்டுவதற்காக வைத்திருந்த சேமிப்பு பணம் 5 லட்சம் ரூபாயையும் ஆன்லைன் ரம்மியில் அவர் இழந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ், நேற்று இரவு வீட்டில் அனைவரும் உறங்கிய நிலையில், தூக்கி தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சுரேஷ் எழுதி வைத்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories: