×

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மைதானத்தை திறந்தால் ஒரு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்க தயார் - வியாபாரிகள்

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மைதானத்தை திறந்தால் ஒரு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்க தயார் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் முறையீடு செய்துள்ளனர்.

தமிழகத்தில் அண்மை காலமாக தக்காளி விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு கிலோ தக்காளி என்பது 140 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு குறைந்த விலையில் விற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் சிவா ஆஜராகி ஒரு முறையீடை மேற்கொண்டார். இந்த முறையீட்டில் கொரோனா பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி முதல் கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட் மூடப்பட்டு செப்டம்பர் 28ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மார்க்கெட்டில் 86 சென்ட் நிலப்பரப்பில் தக்காளி கிரவுண்ட் என்ற மைதானம் உள்ளது என்றும் இங்கு தக்காளி ஏற்றி வரும் லாரிகள் வந்து செல்வது வழக்கம் என்றும் தெரிவித்துள்ளார். கோயம்பேடு மார்க்கெட்டை அரசு திறந்தாலும் இந்த மைதானத்தை திறக்கவில்லை என்றும் இந்த மைதானத்தினுள் தக்காளிகளை ஏற்றிவந்த 11 லாரிகள் நிறுத்தப்பட்டு பின்பு தக்காளி அப்படியே அழுகி போனதாகவும் உயர்நீதிமன்றம் தலையிட்டு அந்த லாரிகள் விடுவிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் இந்த மைதானம் திறந்தால் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள் மார்கெட்டுக்குள் வரும் வாய்ப்புகள் அதிகம் என்றும் இதன் காரணமாக தக்காளி விலை உயர்வது தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கிறார்.

தற்போது இந்த மைதானம் திறந்தால் ஜெய்ப்பூர், உதய்ப்பூர், நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா வழியாக தக்காளி லாரிகளில் கொண்டு வந்து அந்த மைதானத்தில் நிறுத்தி சரக்குகளை இறக்க முடியும். இதன் மூலம் தக்காளியின் விலை அதிரடியாக குறையும். 40 முதல் 50 ரூபாய் வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய தாங்கள் தயாராக இருப்பதாகவும், இதுகுறித்து தமிழக அரசுக்கு தாங்கள் தெரிவித்துள்ளதாகவும், எனவே இதுதொடர்பாக தக்காளி மைதானத்தை திறக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது நிலுவையில் உள்ளது என்றும் இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், இந்த வழக்கை ஒரு அவசர வழக்காக நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார். கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தமே 15 மொத்த தக்காளி வியாபாரிகள் கடைகள் உள்ளதாகவும் அதில் 30 லாரிகள் வரைக்கும் மட்டுமே வந்து செல்லக்கூடிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா லாரிகள் வந்து செல்கின்றன. தற்போது இந்த மைதானத்தை திறந்தால் மேலும் பல லாரிகள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும். இதனால் தக்காளி வரத்து அதிகரிக்கும். எனவே விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் அதிக அளவு கொரோனா பரவல் காரணமாக கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. பின்னர் படிப்படியாக மொத்த வியாபாரிகள் கடைகள் மட்டும் திறக்கப்பட்டது. அப்போது தான் இந்த மைதானமும் மூடப்பட்டது. வெளிமாநில லாரிகள் அதிக அளவு வந்துசெல்வதால் இந்த மைதானம் மூடப்பட்டது. கொரோனா விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால் இன்னும் திறக்கப்படாமல் இருந்தது. இந்த மைதானத்தை திறக்க வேண்டும் என்ற வழக்கு நிலுவையில் உள்ளது.

Tags : Chennai Coimbatu Marketplace , Tomato
× RELATED முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனின்...