×

போலி கொரோனா சான்றிதழ் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை: சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல், அதனைச் செலுத்திக் கொண்டதாக முறைகேடாக சான்றிதழ் பெறும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மாநில மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சிலர் அதனைத் தவறாகப் பயன்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, தங்களுடைய ஆதார் எண்ணை மட்டும் பகிர்ந்துவிட்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாது தடுப்பூசி செலுத்தியதைப் போன்று சான்றிதழ் பெறுவதாகத் தெரிகிறது. இதில் சில களப் பணியாளர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகளை மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற செயல்களில் களப் பணியாளர்கள் ஈடுடாமல் இருப்பதையும், தடுப்பூசி செலுத்துக் கொண்டவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும். முறைகேடாக சான்றிதழ் வழங்கும் நோக்கில் களப் பணியாளர்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு சுற்றறிக்கையில் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

Tags : Health Department , Strict action against fake corona certification staff: Health Department warning
× RELATED இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவி...