கல்வான் மோதலில் வீர மரணம் தமிழகத்தை சேர்ந்த பழனி உட்பட 4 வீரர்களுக்கு வீர் சக்ரா விருது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

புதுடெல்லி: கல்வான் பள்ளத்தாக்கு மோதலின்போது வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் பழனி உட்பட 20 வீரர்களுக்கு வீர தீர செயல்களுக்கான மகாவீர் சக்ரா, வீர் சக்ரா விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். டெல்லியில் பாதுகாப்பு துறை சார்ந்த விருதுகள் வழங்கும் விழா நேற்றும் 2வது நாளாக நடைபெற்றது. இதில், கடந்த ஆண்டு சீனாவுடன் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலின் போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சீனாவுக்கு எதிரான தாக்குதலின்போது வீரர்களுக்கு தலைமை தாங்கி சென்ற கர்னல் பிகுமல்லா சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அவரது மனைவி சந்தோஷி, தாய் மஞ்சுளா ஆகியோரிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த விருதை வழங்கினார். இது, இந்திய ராணுவத்தில் வீரதீரத்துக்காக வழங்கப்படும் 2வது பெரிய விருதாகும். தொடர்ந்து, இதே மோதலில் வீர மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் கே.பழனி, நையீப் சுபேதார் நுடுராம் சோரன், நாயக் தீப்க சிங், சிப்பாய் குர்தேஜ் சிங் ஆகியோருக்கு வீர் சக்ரா விருதுகள் வழங்கப்பட்டது. அவர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதியிடம் இருந்து இந்த விருதை பெற்றுக் கொண்டனர். தமிழக வீரர் பழனியின் மனைவி வானதி தேவி விருதை பெற்று கொண்டார்.

* எப்-16 சுடப்பட்டதா? பாகிஸ்தான் மறுப்பு

கடந்த 2019ம் ஆண்டு, பிப்ரவரி 27ம் தேதி இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை துரத்தி சென்று சுட்டு வீழ்த்தியதற்காக தமிழகத்தை சேர்ந்த விமானப்படை குரூப் கேப்டன் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய விமானியால் பாகிஸ்தானின் எப்-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறும் இந்தியாவின் ஆதாரமற்ற கருத்தை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். சர்வதேச நிபுணர்களும் விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: