கோவை: இன்று (23.11.2021) கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவில் உரையாற்றிய முதல்வர், ஆட்சிக்கு வந்தது முதல் இந்த அரசு பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. முதலில் கொரோனா - அதை எதிர்கொண்டு, இன்னும் முழுமையாகக்கூட வெற்றி பெறவில்லை, ஆனாலும் ஓரளவுக்கு வெற்றி கண்டிருக்கிறோம். அதைத் தொடர்ந்து இப்போது மழை, அதனால் ஏற்படக்கூடிய வெள்ளம். இயற்கை சூழலை எதிர்கொள்ளக்கூடிய நிலை இந்த அரசுக்கு இருக்கிறது, அதைச் செய்துகொண்டு இருக்கிறோம். அதுவும் துரிதமான, துல்லியமான நடவடிக்கைகளின் மூலமாக தமிழக அரசு எதிர்கொண்ட காரணத்தால்தான் அதில் ஓரளவுக்கு நாம் வெற்றிபெற முடிந்திருக்கிறது.
மக்களைக் காக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, அரசாங்கத்தினுடைய ஒவ்வொரு உறுப்பினர்களும் செயல்பட்டால்தான் இந்த வெற்றி உறுதி செய்யப்படும், நிச்சயமானதாக அமைந்துவிட முடியும். இக்கூட்டத்தின் வாயிலாக, முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை, வணக்கத்தை முதலில் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பதைப் போல, மக்கள் இல்லாமல் அரசோ ஆட்சியோ இயங்கிட முடியாது. அந்த மக்களைக் காப்பதுதான் ஒரு அரசாங்கத்தினுடைய மகத்தான பணி. அதில் இந்த அரசு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அடுத்ததாக ஒவ்வொரு துறைக்கும் தேவையான திட்டங்களைத் தீட்டி அதற்காக பல செயல்வடிவங்கள், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சியில் நான் இப்போது கலந்து கொண்டிருக்கிறேன்.
இத்தகைய சோதனையான காலத்திலும்கூட, தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்து, ஆறு மாத காலத்தில் இது மூன்றாவது முதலீட்டாளர்கள் மாநாடு, மூன்றாவது முறையாக நடக்கின்ற மாநாடு.
மாநாடு என்றால் கூட்டத்தைக் கூட்டுவது, பேசுவது, கோரிக்கை வைப்பது என்பதோடு நிறுத்தப்படுவது, அதுதான் மாநாடு என்று சொல்வோம். ஆனால் இந்த மாநாட்டில் என்ன வித்தியாசம் என்றால், ஒப்பந்தங்கள் கையெழுத்து போடக்கூடிய மாநாடாக இந்த மாநாடு நடந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு மீது இத்தகைய நம்பிக்கை வைத்து, அனைத்துத் தொழிலதிபர்களும், தொழில் நிறுவனங்களும் இன்றைக்கு முன்வந்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. அதற்காக முதலில் தமிழக அரசின் சார்பில் அவர்களுக்கு எல்லாம் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மே மாதத்தில் ஆட்சிக்கு வந்தோம். ஜூலை மாதத்தில் ஒரு முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினோம். செப்டம்பர் மாதத்தில் ஒரு ஏற்றுமதியாளர் மாநாட்டை நடத்தினோம். இதோ நவம்பரில் அடுத்த முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்திருக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு ஒரு மாநாடு நடந்திருக்கிறது. இதே வேகத்தில் போனால் - இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெறும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம், நிச்சயமாக பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.
நான் பல நேரங்களில், பல நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். பல மாநில முதலமைச்சர்களை எல்லாம் ஒப்பிட்டு ஒரு கணக்கீடு எடுத்து ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட்டார்கள். அதில் இன்றைக்கு நம்பர் 1 முதலமைச்சராக என் பெயரை அறிவித்திருக்கிறார்கள். இது எனக்குக் கிடைத்த பெருமை மட்டுமல்ல, எங்களுடைய அமைச்சரவைக்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல, இந்த அரசுக்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கக்கூடிய பெருமையாகத்தான் நான் கருதுகிறேன். என் பெயரைச் சொல்லி நம்பர் 1 முதலமைச்சர் என்று சொல்வதைவிட, நம்பர் 1 தமிழ்நாடு என்று சொல்லக்கூடிய நிலையை உருவாக்குவதுதான் என்னுடைய இலட்சியம்.
அதை நோக்கித்தான் இன்றைக்கு போய்க்கொண்டிருக்கிறோம். இன்று மட்டும் 35,208 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 76,795 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரவலான வளர்ச்சியே பார் போற்றும் வளர்ச்சி என்று நான் கூறியிருந்தேன். அதற்கேற்ப 22 மாவட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனால் அனைத்து மாவட்ட இளைஞர்களுக்கும் அவர்களது ஊர்களுக்கு அருகிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
தொழில் நிறுவனங்கள் நம் மாநிலத்தில் முதலீடு செய்வதற்கு நிலம் கையிருப்பு மிகப் பெரிய பங்காற்றுகிறது. அண்மையில் வெளிவந்த ஒன்றிய அரசினுடைய மாநிலங்களுக்கான IPRS (Industrial Park Rating System) தரவரிசையில், தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக அறிவித்திருக்கிறது. இது நமக்கெல்லாம் பெருமை; நாம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலட்சிய இலக்கினை அடைவது வெகுதொலைவில் இல்லை என்ற அந்த நம்பிக்கையை எல்லோருக்கும் அளித்துக்கொண்டிருக்கிறது.
2021-2022ஆம் நிதி ஆண்டிற்கான திருத்த வரவுசெலவுத் திட்ட உரையில், தமிழ்நாட்டில், நிதிநுட்ப நகரம், அதாவது Fintech City அமையப் பெறும் என்று நாம் அறிவித்திருந்தோம். 2025 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை நிதிநுட்ப நிறுவனங்களின் உலகமையமாக மாற்றக்கூடிய வகையிலே, இன்று நான்- தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை (Tamil Nadu Fintech Policy) 2021 என்ற சிறப்புக் கொள்கையை வெளியிட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் நிதிநுட்ப நிறுவனங்களுக்காக, 10 இலட்சம் சதுரஅடியில், பணியிடம் உள்ள நிதிநுட்ப நகரம் (Fintech City) ஒன்று உருவாக்கப்படும். அந்நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி மேம்பட்ட சேவைகளை வழங்கக்கூடிய வகையில் தொழில்துறை வழிகாட்டி நிறுவனத்தில் ஒரு பிரத்தியேக - நிதிநுட்பபிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் சென்னையில் டைடல் பார்க் திறந்துவைக்கப்பட்டது. இந்நிறுவனம் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இதனை அடுத்தக் கட்டத்திற்கு முன்னெடுத்து செல்லக்கூடிய வகையில் தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் நியோ டைடல் பார்க்குகள் அமைக்கப்படும்.
நமது நாட்டில் வார்ப்புத் தொழிலில் கோவை மாவட்டம் முன்னிலை வகித்து வரக்கூடிய நிலையில், நவீன தொழில்நுட்பங்களை இந்தத் தொழிற்சாலைகளுக்கு அளித்திருக்கக்கூடிய வகையில் ஒரு ‘Centre of Excellence’ அமைக்கப்படும்.
ஐம்பதாயிரம் பேருக்கு கோவையில் வேலைவாய்ப்பு அளித்துவரும் நகைத் தொழிலை மேலும் மேம்படுத்திட, சிறு நகைத் தொழிற்குழுமங்கள் அரசின் மானிய உதவியோடு வழங்கப்படும்.
பொள்ளாச்சி வட்டத்தில் 21 கோடி ரூபாய் செலவில் தென்னை நார் பதப்படுத்தும் தொழில்களுக்கான குழுமம் அமைக்கப்படும். தொழில்துறையினுடைய மிக முக்கியமான தூண் என்றால் அது கோவை மாவட்டம்தான். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் கிடையாது. அதை மெய்ப்பிக்கக்கூடிய வகையில், சென்னைக்கு அடுத்ததாக கோவையில் இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர், Pump City of India என பல்வேறு பெருமைகளையும் கொண்டிருக்கக்கூடிய கோவையில் இந்த மாநாடு நடைபெறுவது மிகப்பொருத்தமாக அமைந்திருக்கிறது. ஒரு தொழிலுக்கு முக்கியத்துவம் என்று இல்லாமல் பல்வேறு தொழில்களின் மையமாகக் இந்தக் கோவை அமைந்திருக்கிறது.
குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால்,
* நெசவாலைகள்,
* பின்னலாடைகள்
* கோழிப்பண்ணைகள்
* தென்னை வளர்ப்பு
* வேளாண்மை
* சிறுதொழில்கள்
* குறுதொழில்கள்
- என கோவையில் தொடாத தொழில்களே இல்லை. அதுமட்டுமல்ல, தொட்டுத் துலங்காத தொழில்களும் இல்லை. ஆகவே, இப்படி சொல்லத்தக்க, பாராட்டத்தக்க மாவட்டமாக இந்த மாவட்டம் அமைந்திருக்கிறது.
தமிழ்நாட்டினுடைய இரண்டாவது பெரிய நகரமாகவும், தென்னிந்தியாவில் ஐந்தாவது பெரிய நகரமாகவும் கோவை இருக்கிறது. மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்திருப்பது கோவை மாவட்டம் ஆகும். இத்தகைய புகழோடு நீங்கள் மனநிறைவு அடைந்துவிடக் கூடாது என்று சொல்வதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன். இன்னும் பல்வேறு தொழில்கள் இருக்கின்றன. அதிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வான்வெளி, பாதுகாப்புத் துறை தொடர்பான பொருட்கள் உற்பத்தியில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் தொடர்பான பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, நமது மாநிலத்தில் கோவையை ஒரு முனையமாக வைத்து, வான்வழி மற்றும் பாதுகாப்புத் தொழில் பெருவழித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீடுகள் மற்றும் 1 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடக்கூடிய வகையில், இந்தத் துறையில் உலக அளவில் வலுப்பெறும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
L&T, LMW, TVS போன்ற பெரிய நிறுவனங்கள் இத்துறையில் தங்களுடைய முதலீடுகளை மேற்கொண்டிருக்கிறது. விமானம் மற்றும் வானூர்தி உதிரிபாகங்கள் உற்பத்திக்காக பிரத்தியேகமாக கோவையில் ஒரு தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று வரவு செலவுத் திட்ட அறிக்கையிலே நான் ஏற்கனவே அறிவித்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக, சூலூரில் ஒரு தொழிற்பேட்டைப் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. இதனைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
* பின்னலாடைகள், ஜவுளித் தொழில்களும் நவீனப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உலகளவில் நாம் ஏற்றுமதி செய்தாலும், நமக்கு மற்ற நாடுகளின் போட்டியும் அதிகம் இருக்கிறது. அந்த போட்டியை வெல்லக்கூடிய சக்தியாக நம்முடைய தயாரிப்புகள் இருந்திட வேண்டும்.
* தொழில்நுட்ப ஜவுளிகள், மருத்துவ ஜவுளிகள், தொழிலகங்களுக்கான ஜவுளிகள், விளையாட்டுத் துறைக்கான ஜவுளிகள் - என்று தரம் பிரித்து உற்பத்தியை அதிகப்படுத்தவும், நவீனப்படுத்தவும் வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
* மின்னணுவியல் துறையில் சிறப்பு கவனம் செலுத்துவதற்கு அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 25% பங்களித்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது.
* காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் போல கோவையும் மின்னணுவியல் மற்றும் மின்னணு வன்பொருள் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்.
* இதுபோன்ற துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு, அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
* கோவை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது இங்குள்ள மக்களுடைய விருந்தோம்பலும் புதுமையான கண்டுபிடிப்புகளும்தான் நம்முடைய நினைவுக்கு வருகிறது.
* உங்களுடைய கண்டுபிடிப்புகளான மோட்டார் பம்புகள், வெட் கிரைண்டர்கள் உலக நாடுகளை வியக்க வைத்திருக்கிறது. இதனை முன்னுதாரணமாகக் கொண்டு, ஏழை எளிய மக்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் மேலும் பல அரிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரவேண்டும். இதன் மூலமாகத் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் மேலும் வளப்படுத்துங்கள் என்று முதல்வர் பேசினார்.