ஊட்டியில் பல நாட்களுக்கு பின் வெயில் பூங்காக்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம்

ஊட்டி:  ஊட்டியில் பல நாட்களுக்கு பின் வெயிலான காலநிலை நிலவிய நிலையில் பூங்காக்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. நீலகிரி   மாவட்டம் ஊட்டியில் 2வது  சீசன் கடைபிடிக்கப்படும் நிலையில், இம்மாத   துவக்கம் முதல் பெய்து வந்த மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து   காணப்பட்டது. குறிப்பாக கடந்த வாரம் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால்   சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின.

இதனிடையே கடந்த 2 நாட்களாக மழை குறைந்து   காணப்பட்ட நிலையில் நேற்று பல நாட்களுக்கு பின் ஊட்டியில் வெயில்   கொளுத்தியது. இதனால் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா,   படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக   அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக   காணப்பட்டது. இதனிடையே நேற்று காலை முதல் நீர்பனி பொழிவு காணப்பட்டது.   இதனால் காலை நேரங்களில் கடும் குளிர் நிலவியது. இதேபோல் மதியத்திற்கு பின்   வெயில் குறைந்து கடும் குளிர் நிலவியது.

Related Stories: