×

ஹாட்ரிக் வெற்றியுடன் நியூசி.யை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

கொல்கத்தா: நியூசிலாந்து அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 73 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. ஈடன் கார்டனில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. ராகுல், அஷ்வினுக்கு ஓய்வளிக்கப்பட்டு இஷான், சாஹல் இடம் பெற்றனர். நியூசி. அணியில் சவுத்தீக்கு ஓய்வளிக்கப்பட்டதால், சான்ட்னர் தலைமை பொறுப்பேற்றார். சவுத்தீக்கு பதிலாக பெர்குசன் சேர்க்கப்பட்டார். ரோகித் - இஷான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்தது. இஷான் 29 ரன் விளாசி சான்ட்னர் சுழலில் செய்பெர்ட் வசம் பிடிபட்டார். சூரியகுமார் டக் அவுட்டாக, பன்ட் 4 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், ரோகித் 56 ரன் (31 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஈஷ் சோதி பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் வெங்கடேஷ் 20, ஷ்ரேயாஸ் 25, ஹர்ஷல் 18 ரன் விளாசி விக்கெட்டை பறிகொடுத்தனர்.இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது. அக்சர் 2, தீபக் சாஹர் 21 ரன்னுடன் (8 பந்து,   2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் சான்ட்னர் 3, போல்ட், மில்னே, பெர்குசன், சோதி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து17.2  ஓவரில் அனைத்து  விக்கெட்டையும் இழந்து 111 ரன் மட்டுமே எடுத்து, 73 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

கப்தில் அதிகபட்சமாக 51 ரன் (36 பந்து, 4 பவுண்டரி,4 சிக்சர்) விளாசினார். டிம் செப்பர்ட் 17  ரன், பெர்குசன் 14  ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இந்திய பந்துவீச்சில் அக்சர் பட்டேல் 3, ஹர்ஷல் படேல் 2, சாஹர், சாஹல், வெங்கடேஷ் தலா 1 விக்கெட் விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 3-0 என ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் கான்பூரில் 25ம் தேதி தொடங்குகிறது.

Tags : Newsy ,Hadrick ,Iai Whitewash ,India , India blanqueó a Nueva Zelanda con una victoria de hat trick
× RELATED சில்லி பாய்ன்ட்…