×

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு; 100 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது

செங்கல்பட்டு: பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 100க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாலாற்றின் கரையோரம் உள்ள திம்மாவரம் மகாலட்சுமி நகர், அம்பேத்கர் நகர், படவேட்டம்மன் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. பாலாற்றின் கரையோரம் உள்ள மேலமையூர் ராமகிருஷ்ணா நகர், ஆத்தூர், வில்லியம்பாக்கம், பாலூர், மணப்பாக்கம், ஒழலூர், வல்லிவலம், வாயலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சில நாட்களாக பாலாற்று வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதன்காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 27 முகாம்களில் 3 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், தோட்டப் பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கி சேதமாகி உள்ளன. பாலாற்றில் இருந்து உபரிநீர் அதிகமாக வெளியேறியதால் வல்லிபுரம் பாலாற்று தரைப்பாலம், இரும்புலிசேரி தரைப்பாலம், வாயலூர் மற்றும் உதயம்பாக்கம் பழைய பாலாற்று பாலங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 528 பொதுப்பணி துறை ஏரிகளில் 500 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள 600 ஏரிகள் உள்பட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியுள்ளன.‘’சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஏரிகளின் நீர் இருப்பை உறுதி செய்ய, அதன் கரைகளை பலப்படுத்தி பொதுப்பணி துறை அதிகாரிகள் பராமரிப்பு மற்றும் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்’’ என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Flooding in the Milky Way; 100 houses were flooded
× RELATED கொடைகானல் மேல்மலை கிராமங்களில் பயங்ககரமான காட்டுத் தீ