×

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

*கனிமொழி எம்பி, கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு

செய்துங்கநல்லூர் :  ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடித்த 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிக்குள் சிறுபானைகள், ஆயுதங்கள் கிடைத்துள்ளதை கனிமொழி எம்பி, கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டனர். ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த அக்.10ம் தேதி அகழாய்வு பணிகள் தொடங்கியது. மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் 3 இடங்களில் 10க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அகழாய்வு பணியில் ஏற்கனவே 12 முதுமக்கள் தாழிகள், சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான வாழ்விடப் பகுதிகள், 3500 ஆண்டுகள் முதல் கடந்த 150 ஆண்டுகள் முன் வரை ஆதிச்சநல்லூரில் மனிதர்கள் வாழ்ந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சுண்ணாம்பு தளம் உள்ளிட்ட பல அபூர்வங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூரில் இரண்டாம் அடுக்கில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தாழிக்குள் பல்வேறு பொருட்கள் இருக்கும் என நம்பப்பட்டது. எனவே முதுமக்கள் தாழிகளைத் திறந்து அதற்குள் இருந்து பொருட்களை எடுக்க ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் நேற்று கனிமொழி எம்பி, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், சுண்ணாம்பு தளத்தை பார்வையிட்டனர். அதன்பின்னர் முதுமக்கள் தாழி கனிமொழி எம்பி முன்னிலையில் திறக்கப்பட்டது. அதில் மனிதனின் மண்டையோடு, கால் எலும்புகள், சிறு பானைகள், கலயங்கள் இருந்தன. மேலும் பானைகளில் தானியங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பக்கவாட்டிலேயோ அல்லது தாழிக்குள்ளே ஆயுதங்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறினர். இதுகுறித்து தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் விளக்கமளித்தார்.நிகழ்ச்சியில் தொல்லியல் ஆய்வாளர்கள் எத்தீஸ்குமார், முத்துக்குமார், விக்னேஷ், கலைச்செல்வன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஆதிச்சநல்லூர் பஞ்.தலைவர் சங்கர் கணேஷ், புளியங்குளம் வேல்மயில் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Adichanallur , Aathichanallur,Old Ornaments,2500 years old
× RELATED முன் விரோதம் காரணமாக ஓபிஎஸ் அணி...