×

உத்திரமேரூர் அருகே செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலம் உடையும் அபாயம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே செய்யாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரத்துக்கு செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக பருவமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குட்டை, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. நேற்றிரவு பெய்த கனமழையால் உத்திரமேரூர் பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. மருத்துவான்பாடி, காட்டுப்பாக்கம், மேனலூர், வேடபாளையம் ஆகிய பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. சில கிராமங்களில் வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. ஏராளமான நெற்பயிர்கள், தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு பெய்த பலத்த மழை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக பாலாற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகளவில் உள்ளது. இதனால் உத்திரமேரூர் அடுத்த வெங்கச்சேரி-மாகரல் இடையே செய்யாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தரைப்பாலம் வலுவிழந்து காணப்படுகிறது. போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்திரமேரூர் அருகே வெங்கச்சேரி அருகே தரைப்பாலத்தில் பேரிகார்டு அமைத்து போக்குவரத்துக்கு தடைவிதித்துள்ளனர். இதனால் காஞ்சிபுரம்- உத்திரமேரூர் இடையே இன்று அதிகாலை முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பாலம் உடையும் அபாயம் உள்ளதால் பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகளையும் அடுக்கி வைத்துள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, இந்த தரைப்பாலம் உடைந்தது. இதனால் திருமுக்கூடல், பழையசீவரம், வாலாஜாபாத் வழியாக சுமார் 25 கிமீ தூரம் சுற்றி காஞ்சிபுரத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதையடுத்து தற்காலிகமாக இந்த பாலம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த முறையும் வெள்ளம் அதிகமாக வந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போதும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் 25 கிமீ தூரம் சுற்றி காஞ்சிபுரத்துக்கு பொதுமக்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, திமுக ஆட்சி அமைந்ததும் இந்த செய்யாற்றின் பாலம் அமைப்பதற்கான திட்டமிடல் பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Uttiramerur , Extreme levels of flood danger were announced in the area near Uttiramerur
× RELATED உத்திரமேரூரில் ஒரே நாளில் 2,286 பேருக்கு கொரோனா தடுப்பூசி