×

கனமழை எச்சரிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு உத்தரவு: வருவாய் பேரிடர் மேலாண்மை துறை தகவல்

சென்னை: கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழை காலத்தில், 1.10.2021 முதல் 18.11.2021 வரை தமிழ்நாட்டில் 480.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவை காட்டிலும் 61 சதவிகிதம் கூடுதல் ஆகும். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 38 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 64.71 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டு உள்ளது. இது, மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, இன்று திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

உபரி நீராக முக்கிய நீர்த்தேக்கங்களான, செங்குன்றத்தில் இருந்து 2156 கன அடியும், சோழவரம் ஏரியில் இருந்து 700 கன அடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 2111 கன அடியும், பூண்டியில் இருந்து  7021 கன அடியும் திறந்து விடப்படுகிறது.
நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையின் தலா 2 குழுக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 குழுவும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குழுவும் தயார் நிலையில் உள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் 54 படகுகளும், மழைநீரை வெளியேற்ற 46 ஜேசிபிகளும், 793 ராட்சத பம்புகளும் தயார் நிலையில் உள்ளன.

கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை நேரங்களில் நீர்த்தேக்கங்கள், அணைகளில் அதிகப்படியான நீர்வரத்து வர வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு முன்கூட்டியே அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு அணையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பெய்த மழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசித்த பொதுமக்களின் நலன் கருதி, 9 மாவட்டங்களில் மொத்தம் 36 முகாம்களில் 2156 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி பகுதியில் 839 பேர் 5 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 61,34,302 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* ரூ.2,629.29 கோடி சேதம்
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக பெய்த கனமழை முதல் அதி கனமழையினால் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட சேதங்கள் கணக்கிடப்பட்டு, முதல் நிலை மதிப்பீட்டின்படி, மாநிலத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க ரூ.549.63 கோடியும், நிரந்தரமாக சீரமைக்க ரூ.2,079.86 கோடி என மொத்தம் ரூ.2629.29 கோடி தேசிய  பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யக்கோரி, ஒன்றிய அரசுக்கு கடந்த 17ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : Revenue Disaster Management , Heavy Rain Warning Instructs Collectors to Take Precautionary Measures: Revenue Disaster Management Department Information
× RELATED வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை...