தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலத்திற்கு 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி: கோயிலுக்குள் செல்ல அனுமதியில்லை என ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து மக்கள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் டி.செந்தில்குமார் தாக்கல் செய்த பொது நல மனுவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்ற மகா கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விழாவில், பங்கேற்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. பக்தர்களை அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முக சுந்தரம் ஆஜராகி, நேற்று முன்தினம் வரை 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவிற்கு 20 லட்சத்திற்கு மேலானவர்கள் வருவார்கள். இரண்டு நாட்களில் 3 லட்சம் பேர் கிரிவலம் செல்வார்கள். மக்கள் அதிகம் வந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. கடந்த ஆண்டில் பின்பற்றப்பட்ட நடைமுறைதான் இப்போதும் பின்பற்றப்படுகிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசின் நிலைப்பாட்டை பதில் மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்தி பிற்பகலுக்கு விசாரணையை தள்ளிவைத்தனர். பிற்பகல் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் என 20 ஆயிரம் பக்தர்களை மட்டுமே கிரிவலத்திற்கு அனுமதிக்க முடியும். அவர்கள் மலை மீது ஏறவோ, கோயிலுக்குள் செல்லவோ அனுமதியில்லை. நவம்பர் 18, 19, 20 தேதிகளில் கட்டளைதாரர்களுக்கு மட்டும் கோயிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும். கொரோனா தடுப்பூசி இரு தவணை போட்டவர்கள் மட்டுமே தீபத்திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் ஆய்வு செய்து பக்தர்களை அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் தீபத்திருவிழாவை இணைய தளத்திலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ காணலாம். கட்டளைதாரர்கள், பக்தர்கள் என அனைவருமே கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள், அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பக்தர்கள் பின்பற்ற அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர்.

ஐகோர்ட் உத்தரவு...

* திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரம் பக்தர்களையும், இதர மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்களையும் இன்றும் நாளையும் கிரிவலத்திற்கு அனுமதிக்க வேண்டும்.

* பக்தர்கள் ஆன்லைன் மூலம் கிரிவலத்திற்கான அனுமதியை பெற வேண்டும். 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

* பக்தர்கள் மலையில் ஏற அனுமதியில்லை.

* கட்டளைதார்கள் 300 பேர் கோயிலுக்குள் செல்லலாம்.

Related Stories: