முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள மயான ஊழியர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரணம்: மக்கள் நல்வாழ்வு துறை அறிவிப்பு

சென்னை: மயான ஊழியர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஊழியர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதற்காக மத்திய, மாநில அரசின் காவல் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்க் காவல் படை பணியாளர்கள், சிறைச்சாலை பணியாளர்கள், பேரிடர் மேலாண்மையில் ஈடுபடும் தன்னார்வலர்கள், கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் பணியாற்றும் நகராட்சி மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் ஆகியோரை முன்கள பணியாளர்களாக அறிவித்துள்ளது.

தற்போது ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியில் கொரோனா பெருந்தொற்று காலத்தில், தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணிபுரிந்து வரும் மயான பணியாளர்களின் உன்னதமான பணியை அங்கீகரிக்கும் வகையிலும், மேலும் அவர்களுடைய உயரிய அங்கீகாரம் மற்றும் சலுகைகள் கிடைக்கும் வகையிலும் அவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து சலுகைகள் வழங்க கடந்த மாதம் ஆணையிடப்பட்டது. மத்திய அரசின் ஆணைப்படி மயான பணியாளர்கள் மத்திய அரசின் முன் களப் பணியாளர்கள் பட்டியலில் இல்லாவிடினும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் போது தமிழ்நாடு அரசு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்க வேண்டும்.

கொரோனா நோய் தொற்றின் காரணமாக உள்ளாட்சி பேருராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணிபுரிந்து வரும் மயான பணியாளர்கள் இறக்கும் போது அவர்களின் குடும்பங்களுக்கு சம்மந்தப்பட்ட துறை வாயிலாக ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More