×

திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ₹137 கோடி கடன்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 122 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இதுவரை ₹137 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கூறினார்.திருவள்ளூரில் கூட்டுறவு துறை 68வது வார விழாவை முன்னிட்டு மகளிர் கடனுதவி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சுதர்சனம், எஸ்.சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கேவிஜி.உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மேலாண் இயக்குநர் மலர்விழி, துணைப்பதிவாளர் அ.காத்தவராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெய வரவேற்றார்.  இதில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு, கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவூரில் தான் அகில இந்திய அளவில்  முதன் முதலாக 1904ல் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இதையொட்டி, திருவள்ளூர் முன்னோடி மாவட்டமாகும். கூட்டுறவு வங்கிகள் மூலம் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் தள்ளுபடி செய்வது குறித்து கள ஆய்வு நடக்கிறது.
இந்த மாவட்டத்தில் 122 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 10 தொடக்க வேளாண் ஊரக வளர்ச்சி வங்கிகள், 3 வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், 2 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் மருந்தங்களும் செயல்படுகின்றன.இதில் 122 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இதுவரை ₹137 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில் தவணை தேதிக்குள் பயிர் கடன் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி வசூல் செய்வதில்லை என முதல்வர் அறிவித்துள்ளார் என கூறினார்.

தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுக்கள், பயிர் கடன், பழங்குடியினருக்கான கடன், நரிக்குறவர் சிறு கடன் உள்ளிட்ட 1792 பேருக்கு ₹14.06 கோடி கடனுதவி, நலத்திட்டங்கள், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு துறை பணியாளர்கள் மற்றும் கூட்டுறவு வார விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

Tags : Tiruvallur district ,Minister ,SM Nasser , Tiruvallur, Agricultural Co-operative Societies, கடன் 137 crore, loan
× RELATED திருத்தணியில் கத்திரி வெயில் உக்கிரம் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்